ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்தியா 2-ஆவது உலகக் கோப்பை

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் இந்தியாவின் கோப்பைக் கனவு நிறைவேறியுள்ளது. முன்னதாக, கடந்த 2001-ஆம் ஆண்டு இந்திய ஜூனியர் அணி கோப்பையை வென்றுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடங்கியது முதல், போட்டியை நடத்தும் நாட்டைச் சேர்ந்த ஒரு அணி கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும். முன்னதாக, இரு அணிகளுக்கு இடையேயான இறுதிச்சுற்று லக்னெளவில் நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் கோல் வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்தது.

ஆட்டத்தின் 8-ஆவது நிமிடத்திலேயே குர்ஜந்த் சிங் அதிரடியாக கோலடித்து இந்தியாவின் வெற்றிக்கான கணக்கை தொடக்கி வைத்தார். இதனால், தங்களது முதல் கோலுக்காக பெல்ஜியம் அணியினர் போராடியபோதும், இந்தியாவின் தடுப்பாட்டத்தால் அது தள்ளிக் கொண்டே போனது.

இந்நிலையில், பெல்ஜியத்துக்கான பெருத்த அடியாக, இந்தியா இரண்டாவது கோல் அடித்தது. ஆட்டத்தின் 22-ஆவது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் தனது பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

இதனால் முதல் பாதியிலேயே இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு ஆட்டத்தின் 70-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பு மூலம் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணிக்கு கோல் வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தால், இந்தியா 2-1 கோல் கணக்கில் வென்றது. இதன்மூலம் இந்தியா தங்கப்பதக்கத்தையும், பெல்ஜியம் வெள்ளியையும் உறுதி செய்தன.

ஜெர்மனி வெற்றி: இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது நடப்புச் சாம்பியனான ஜெர்மனி.