ஜல்லிக்கட்டு ஆதரவாக சேலத்தில் அமைதிப் போராட்டம்

ஜல்லிக்கட்டு இல்லாத இந்தப் பொங்கல் கறுப்புப் பொங்கல்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அருகே உள்ளது நரசோதிப்பட்டி. இந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடை இன்னும் நீடித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் ஜல்லிகட்டு நடக்க வழிவகைகளை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து இதுவரை அமைதியாக இருக்கும் மத்திய அரசுக்கு கறுப்புக் கொடி ஏற்றி எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியை ஏற்றி அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.