தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது: அபிஷேக் சிங்வி

இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று சேர்ந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் வெற்றியாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டம், நிரந்தர சட்டமாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, பிப்ரவரி மாதம் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், பீட்டா தமிழகம் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பீட்டா சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி ஆஜராகிறார். அவர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ”தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் இரு கருத்துகளுக்கும் எதிராகவும் உள்ளது தமிழக அரசின் சட்டம். மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட வழக்குக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. அதேபோல் பீட்டாவுக்காக நான் ஆஜராவது என்பது தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் என்கிற அடிப்படையில்தான். இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.