ஜல்லிக்கட்டு வழக்கு 8 ஆம் தேதி ஒத்திவைப்பு

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 8-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதியன்று மத்திய அரசு, அரசாணை பிறப்பித்தது. ஆனால் ஜனவரி 11-ம் தேதி விலங்குகள் நல வாரியம் அதற்கு தடையுத்தரவு பெற்றது.

இந்நிலையில், வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பில் அவ் வமைப்பின் தலைவர் ராஜேஸ், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணை செல்லும் என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை இன்று மதியம் நடைபெற்றது. அப்போது மத்திய அரசு சார்பில், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு எதையும் மீறவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது ரேஸோ, பொழுதுபோக்கு விளையாட்டோ கிடையாது. கிராம மக்கள் கொண்டாடும் திருவிழா கால விளையாட்டு என வாதிடப்பட்டது.

அதனையடுத்து, வழக்கு விசரானையை வருகிற 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.