ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவ வீரர்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் பிரிவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியே ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி ராணுவத்தினரால் இன்று முறியடிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்திய மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் பதட்டத்தை ஏற்படுத்த எல்லை வழியாக தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. அந்த தீவிரவாதிகள் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகிறார்கள்.  காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் எல்லை பகுதியாகும் . அங்கு யுரி ராணுவ முகாமில் கடந்த மாதம் 18ம் தேதியன்று ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் பலியானார்கள். மேலும் 30 வீரர்கள் காயம் அடைந்தார்கள்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை வேடிக்கை பார்க்க முடியாது என பகிரங்கமாக எச்சரித்த பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்திய ராணுவம் கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு  எல்லை கட்டுப்பாடு கோடு(எல்.ஓ.சி.) பகுதியை கடந்தது. இந்திய ராணுவ குழு,  பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டு இருந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. இந்த தாக்குதலில் 38பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள். மேலும் அங்கிருந்த இதர தீவிரவாதிகள் பாகிஸ்தான் உள் பகுதிக்குள் ஓடி ஒளிந்தனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று தன்கட்கரில்  இரு தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றார்கள். அவர்களது முயற்சியை ராணுவம் சிறப்பாக முறியடித்தது. மேலும் அந்த இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளார்களா? என தேடுதல் வேட்டை தொடருகிறது.