அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக விரக்தியில் இருந்த இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயமடைந்தனர்.

அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய வம்சாவளி வழக்கறிஞரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்திய அமெரிக்க வழக்கறிஞரான நாதன் தேசாய், அவர் திங்கட்கிழமை அன்று ஹவுஸ்டன் தெருவில் சென்றுகொண்டிருந்த வழிப்போக்கர்களை நோக்கித் திடீரென சுட ஆரம்பித்தார். இதில் 9 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த காவல்துறையினர் நாதன் தேசாயை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.

வழக்கறிஞராக பணியாற்றிவந்த நாதன் தேசாய் அண்மைக்காலமாக தொடர்ந்து தொழிலில் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தார்.

சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில், ”44 வயதான நாதன் தேசாய் நாஜிக்களுக்கான ராணுவ உடை அணிந்திருந்தார். முறையாக வாங்கப்பட்ட ரைஃபிள் துப்பாக்கியும், பிஸ்டலும் அவரிடம் இருந்தன. அவரின் வீட்டைச் சோதனையிட்டபோது ஏராளமான ஆயுதங்கள் கிடைத்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதன் தேசாயின் தந்தை பிரகாஷ் தேசாய் கூறும்போது, ”தொழில் சரியாக நடக்கவில்லை என்ற வருத்தத்தில் நாதன் இருந்தார். வீட்டுக்கு வருவதையும் குறைத்திருந்தார். வெகுநாட்களுக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வந்த நாதன் என்னை சந்திக்கவேயில்லை. என் மனைவியிடம் மட்டும் பேசிவிட்டுச் சென்றுவிட்டுச் சென்றிருக்கிறார்.

விந்தையான வழக்குகளையும், கிரிமினல் வழக்குகளையுமே அதிகம் கையாண்டு வந்ததால் எதிரிகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள தற்காப்பு ஆயுதங்களை வைத்திருப்பது நாதனின் வழக்கம். ஆனால், நாதனின் இந்த செய்கை அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது இந்த வருடத்தில் இது இரண்டாவது முறை. கடந்த ஜூன் மாதம் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான மைனாக் சர்க்கார், தன் முன்னாள் மனைவியையும், பேராசிரியரையும் சுட்டுக்கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.