இந்தியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் மோதல், 8 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொடுத்த பதிலடியில், பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய ரகசியத் தாக்குதலில் 50க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 40 முறை எல்லைப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகிலும், கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரா நகர் அருகிலும், ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர் நகர் பகுதியிலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றன.

இதுதொடர்பாக, எல்லைப் பாதுகாப்புப் படையின் உயரதிகாரி டி.கே.உபாத்யாய, ஜம்முவில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் இரு இடங்களில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரா நகர் அருகிலும், ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூர் நகர் பகுதியிலும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததுடன், அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தினர்.

நேற்று அக்டோபர் 21ம் தேதி தொடர்ந்து நடத்திய பதிலடி தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ முகாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல்லை நிலவரம் குறித்துத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.