இந்தியா நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியை கைப்பற்றியது

நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி,  49.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும், கோலி – கேப்டன் டோனி ஜோடி அதிரடியான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர்.

இதையடுத்து, 91 பந்தில் 80 ரன்கள் எடுத்த நிலையில் டோனி ஆட்டம் இந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கோலி, நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சை நாளாபுறமும் பறக்க விட்டுக்கொண்டிருக்க, அவருடன் ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டேவும் தனது பங்கிற்கு அவ்வபோது பவுண்டரியை நோக்கி பந்துகளை அடித்துக் கொண்டிருந்தார்.

இறுதியில், 48.2 ஓவரில் 289 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விராட் கோலி 154 ரன்னுடனும், மணீஷ் பாண்டே 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.