இந்தியாவில் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகரிப்பு!

தலைநகர் டெல்லி உள்பட வட மாநிலங்களில் நிலவும் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  டெல்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இன்று காலை முதல் பனிமூட்டம் அதிகளவில் உள்ளது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இந்தியா கேட், ஆர்.கே.நகர் பகுதிகளில் ஏற்பட்ட கடும் பனிமூட்டம் காரணமாக எதிரில் உள்ளவற்றை கூட பார்க்க முடியாத நிலை உருவானது. இதனால் டெல்லி சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி செல்கின்றனர். டெல்லி – நொய்டா, டெல்லி – குர்கான் விரைவு சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சாலை மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக விமான சேவைகள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி சென்றதை காண முடிந்தது.  டெல்லியில் சுமார் 12 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. பனிமூட்டத்தால் டெல்லியில் காற்று மாசுபாடு மோசமான நிலையில் உள்ளது.

நீண்ட நேரமாகியும் பனி குறையாததால் பள்ளிக்கு சென்ற மாணவர்களும், பணிக்கு சென்ற ஊழியர்களும் கடும் சிரமத்திற்கு ஆளுகினர். கடும் பனி மூட்டம் காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தின் மாவ் என்ற இடத்தில் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அதே போல் கான்பூரில் கடும் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள மக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வேலைக்கு செல்கின்றனர்.

சாலையோர தேநீர் கடைகளில் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாலைகளில் பனி மூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்கினர்.