மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஐடி ரெய்டு! ரூ. 50 கோடி பணம் பரிமாற்றம்? Income Tax raid at Madurai Co Operative Bank! Money laundering for 50 Crore?

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முக்கிய பிரமுகர்களுக்கு சுமார் ரூ.50 கோடி வரை பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் திடீரென சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் பணம் மாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

சேலம், கடலூர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட நிலையில், மதுரை வடக்கு வெளி வீதியில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வங்கி மதுரை, தேனி மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 40 கிளைகள் வரை இதன் கீழ் இயங்கி வருகிறது.

கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் இந்த வங்கி கிளைகள் மூலம் முக்கிய பிரமுகர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் ரூ.50 கோடி வரை பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்தும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிரடி சோதனையின்போது மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள கிளைகளில் கம்ப்யூட்டர் மூலம் எவ்வளவு பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்ற விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.