கருப்பு பணத்தைக் கண்டுபிடிக்க 1 கோடி வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்த வருமான வரித் துறை

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கருப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே, ரூ.5 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணத்தை டெபாசிட் செய்தவர்களில், 18 லட்சம் பேரிடம் அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று எஸ்எம்எஸ், இ-மெயில் மூலம் வருமான வரித் துறை விளக்கம் கேட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அதிக அளவில் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் மேலும் பலருக்கு அடுத்த கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

பணத்தை டெபாசிட் செய்தவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால், அவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் இருக்காது. அதே நேரத்தில் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இருந்தால் அவர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, அரசு எதிர்பார்த்ததைவிட பல கோடி ரூபாய் அதிகமாக டெபாசிட்டானது. இதில், கருப்புப் பணத்தைக் கண்டறிந்து, அதனை டெபாசிட் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை வருமான வரித் துறை மேற்கொண்டுள்ளது.