ஜல்லிக்கட்டு பற்றிய படமாக உருவாகும் இளமி

ஆண்களின் அடையாளமாக கருதப்பட்டது வீரம். அந்த வீரத்தின் வெளிப்பாடாக ஜல்லிக்கட்டை விளையாடுவார்கள் அந்த காலத்தில், அதுவும் 300, 400 ஆண்டுகளுக்கு மும்பு ஜல்லிக்கட்டு தான் முதன்மையான விளையாட்டு.

ஜல்லிக்கட்டை தான் உலகறிந்த வீரமாகக் கருதுவார்கள்.

1700 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த உண்மைக் கதையை மையப் படுத்தி ‘இளமி’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரிக்கிறார்கள்.

ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட் செலவில் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் ’சாட்டை’ யுவன் கதாநாயகனாக நடிக்கிறார்.  1700 ஆண்டு கால கட்டத்தில் வாழ்ந்த இளைஞர்களின் தோற்றம் வர வேண்டும் என்பதற்காக யுவன் ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். ஜிம் போய் பயிற்சி எடுத்து வலுவேற்றிக் கொண்டிருக்கிறார்.

நாயகியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்கிறார். கல்லூரி அகில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மற்றும் ரவிமரியா, தவசி, வெள்ளைபாண்டித் தேவர், பரளி நாகராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

யுகா.எம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். பழனிபாரதி, ஜீவன் மயில், ராஜா குருசாமி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஜான் பிரிட்டோ கலைத் துறையை கவனிக்க, நோபல் நடனம் அமைக்கிறார். ராக் பிரபு சண்டைக்காட்சியை வடிவமைக்க, என்.சுதா படத்தொகுப்பு செய்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கும் ஜூலியன் பிரகாஷ், படம் குறித்து கூறுகையில், “எதையும் தியாகம் செய்து ஜல்லிக்கட்டில் ஜெயிக்க வேண்டும் என்று போராடுவது வழக்கம். ஏன் தங்களது உயிரே போனாலும் பரவாயில்லை என்கிற போர் குணம் உள்ள இளைஞர்களை பற்றிய கதை இது.

மின் கம்பங்கள், செல்போன் டவர் போன்றவற்றை தவிர்ப்பதற்காக  பல இடங்களில் அலைந்து திரிந்து படப் பிடிப்புக்கான இடங்களை தேர்வு செய்தோம். இளமி இளமை ததும்பும் காதல் கதையாகவும், அதிரடி ஆக்ஷன் படமாகவும் உருவாகிறது.

படப்பிடிப்பு  தேனிமாவட்டத்தில் குரங்கணி, தலக்கோணத்தில் ‘நரபைலு’ என்ற இடத்திலும் இரண்டு ஊர் அரங்குகளை அமைத்து பிரமாண்டமாக படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். மறக்கடிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டை மீண்டும் திரையில் புதுப்பிக்கிறோம்” என்றார்.