காதல் மனைவியை கொன்று புதைத்த காதல் கணவன் சின்னாளபட்டியில் பயங்கரம்!

சின்னாளபட்டி,: சின்னாளப்பட்டி அருகே குடும்ப பிரச்னையில் பிரிந்துவாழ்ந்த காதல் மனைவியை கொன்று கண்மாயில் புதைத்த கணவரை கைது செய்ய போலீசார் சென்னை விரைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகேயுள்ள பண்ணைப்பட்டி கண்மாயில் பெண் ஒருவரை கொலை செய்து புதைத்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி., கோபால், ஆத்துார் தாசில்தார் சிவசங்கர் முன்னிலையில் கண்மாய் கரையில் புதைக்கப்பட்டதாக கூறிய இடத்தில் தோண்டினர். இறந்த பெண் தலை மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. அவருடைய வாய் துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? என்பதை அறிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர், திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த பிலோமிராஜ் மகள் ஜெயபிரபா (வயது 24) என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே, இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை புழல் போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ஜே.புதுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர் சரண் அடைந்துள்ளார். விசாரணையில், அவர் ஜெயபிரபாவின் கணவர் சிவக்குமார் என்பது தெரியவந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் காதலித்து திருமணம் செய்ததையும், பிறகு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். சிவக்குமாரை கைது செய்யும் நடவடிக்கையில் சின்னாளபட்டி போலீசார் களம் இறங்கி உள்ளனர். இதற்காக சென்னைக்கு போலீஸ் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.