காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் துப்பாக்கி சூடு நெல்லையில் பரபரப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது குமாரபுது குடியிருப்பு. இந்த ஊரைச் சேர்ந்த கவிதா பொறியியல் படித்துள்ளார். இவரது மாமா மகன் இசக்கி முத்து. இவர் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதலுக்கு கவிதாவின் தம்பி சிம்சன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இசக்கிமுத்து உறவினராக இருந்தாலும், படிக்காதவர் என்பதால் திருமணம் செய்யக் கூடாது என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இசக்கி முத்துவின் அம்மா, அப்பா ஆகியோரை ஒரு திருமண வீட்டில் வைத்து கவிதாவின் தம்பி சிம்சன்  துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஒரே மதமாகவும், ஒரே சாதியாகவும், ஏன் உறவினர்களாக இருந்தும் கூட அவர்களது காதலுக்கு வந்துள்ள எதிர்ப்பும், வன்முறையும் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ராஜ் மற்றும் அவரது உறவினர் சிவகுமார் ஆகியோருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் ராஜின் மகன் சிம்சன், துப்பாக்கியால், அவரது மாமா சிவகுமாரையும், சுசிலாவையும் சுட்டதாக எங்களுக்கு முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. காதல் விவகாரத்தில் இந்த தகராறு நடந்ததாகத் தெரியவந்துள்ளது. கவிதாவும், இசக்கிமுத்துவும் காதலித்துள்ளனர்.

இசக்கிமுத்து படிக்கவில்லை என்பதால் கவிதாவுக்கு அவரை திருமணம் செய்து கொடுக்க ராஜ் குடும்பத்தினர் விரும்பவில்லை. மேலும் இசக்கிமுத்துவின் குடும்பம், கவிதா குடும்பத்தை விட வசதி குறைவு. இந்த இரண்டு காரணங்களுக்காக இசக்கிமுத்து, கவிதா திருமணத்துக்கு தடைக்கல் போட்டுள்ளனர் ராஜ் குடும்பத்தினர். ஆனால், பணம், படிப்பு எல்லாம் மறந்து இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். அதை முதலில் இரண்டு குடும்பங்களும் தடுத்துள்ளனர்.

இசக்கிமுத்து பெங்களூரில் இருந்தாலும் இருவரும் தங்களது காதலை போன் மூலம் வளர்த்துள்ளனர். இந்த ஆத்திரத்தில்தான் கவிதாவின் சகோதரன் சிம்சன், இசக்கிமுத்துவின் அப்பா சிவகுமார், சுசிலாவிடம் நேற்றிரவு தகராறு செய்துள்ளார். இந்த வழக்கில் தேப்படும் சிம்சன், தலைமறைவாகி விட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

More