கருப்பு பணத்தை ஒதுக்க மத்திய அரசு உதவி செய்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வருமான வரி சட்டத்தை திருத்தி, கருப்பு பணம் பதுக்கியவர்களுக்கு மத்திய அரசு உதவுகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வருமான வரி சட்டத்தில் இரண்டாவது  திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதன்படி, வங்கியில் கருப்பு பணத்தை டெபாசிட் செய்பவர்கள் அபராதம் உட்பட 50 சதவீத வரி  செலுத்த வேண்டும். மற்றவர்கள் கணக்கில் செலுத்தி முறைகேடு செய்தது கண்டறியப்பட்டால் 85 சதவீதம் வரி விதிக்கப்படும். இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டி:

வருமான வரிச் சட்டத்தை திருத்தி, கருப்பு  பணம் பதுக்கியவர்களுக்கு 50 சதவீதத்தை திரும்ப கொடுக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. நக்ரோடாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்படவில்லை. முதல்முறையாக பலியான வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படாததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், `‘ராணுவ முகாமில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது முடிந்த பிறகு உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வது துரதிஷ்டவசமானது’’ என தெரிவித்தார்.