ஓட்டுநர் ரூபத்தில் கடவுளை நேரில் பார்த்த பயணிகள்

ஓட்டுநர் ரூபத்தில் கடவுளை நேரில் பார்த்த பயணிகள்:-

விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் படுகாயம் அடைந்தார் இருப்பினும் ரத்தம்  சொட்ட சொட்ட பேருந்தை ஒட்டி சென்றார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள தச்சயான்புலியூர் அருகே தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது சரக்கு ஏற்றி வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின்போது சரக்கு லாரி, அதிக சுகமைகளை ஏற்றிக்கொண்டு வந்ததால், இரும்பு சட்டங்கள் அந்த லாரிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்துள்ளது, மோதியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்து, பயணிகள் மீது சிதறி விழுந்துள்ளது.

பயணிகள் அனைவரும் அய்யோ அம்மா என்று உயிர் பயத்தில் கூச்சலிட்டனர், விபத்து நடந்த இடத்தில் இருந்து பல மீட்டர் தூரம் வரை வேகமாக ஓடிய பேருந்து, சாலையின் ஓரமாக திடீரென்று பிரேக் அடித்து நிற்க… பதற்றத்தோடு பயணிகள் அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினர். அப்போதுதான் பேருந்தின் ஓட்டுநர் அமர்ந்திருந்த இடத்தின் மீது லாரி மோதியிருப்பது அனைவருக்கும் தெரியவந்தது.

கம்பிகள் மோதியதால் முன்புற கண்ணாடி சேதமடைந்து ஓட்டுனரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டுவதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடல் முழுக்க ரத்தம் வழிந்தோடிய அந்த நிலையிலும் நம்பிக்கை தளராத ஓட்டுனரை அனைவரும் பாராட்டினர்.

108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பலத்த காயமடைந்த ஓட்டுனரை மருத்துவமனைக்கு பயணிகள் அனுப்பி வைத்தனர்.