4 மடங்கு பணம் வாங்க தர்ரேன்: வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ

விழுப்புரம் மாவட்டத்தில் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சிறுவனின் தயாரிடம் பேரம் பேசிய பொலிசாரின் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

திருக்கோவிலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ்(எ) சந்துரு (15) அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருக்கோவிலூரில் அன்சாரிராஜா என்பவர் நடத்தி வந்த கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள், குடல்வால் பிரச்னை உள்ளதாக தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென கூறி கடந்த 12ம் திகதி மாலை சதீஷ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டான். மறுநாள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்றுவந்தான்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை சிறுவன் சந்துரு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி பெற்றோருக்கு தெரிவிக்காமல் ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனின் சடலத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் சந்துருவின் தாய் வள்ளியிடம் டி.எஸ்.பி கீதா மருத்துவமனைக்கு ஆதரவாக பேரம் பேசிய வீடியோ, வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் மருத்துவமனையின் எக்ஸ்ரே அறை முன் மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பொலிசார் புடைசூழ டிஎஸ்பி கீதா பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

வள்ளி: ஐயோ என் புள்ளய கொன்னுட்டீங்களே(கதறுகிறார்)

மருத்துவர்: காப்பாத்த முயற்சி பண்ணினேன். ஆனா, ஆண்டவன் கையிலதான் எல்லாம் இருக்கு.

டி.எஸ்.பி கீதா: ஆபரேஷன் பண்ணினதுக்கு, மருந்துக்கு எவ்ளோ பணம் கட்டின சொல்லு, அதைவிட 4 மடங்கு நான் இப்பவே வாங்கித் தர்றேன்.

வள்ளி: இங்க ஆபரேஷன் வைத்தியம் பண்ண வசதியில்லன்னு சொல்லியிருக்கலாமே.

டி.எஸ்.பி: சரி விடுங்க. பச்சையாவே கேக்குறேன். இப்போ பாடியை வெச்சு என்ன பண்ண போறீங்க. உன் புள்ள போயிருச்சுமா? போன உசுர யாராலும் கொண்டு வரமுடியாது. என்ன வேணும் அவங்ககிட்டயிருந்து.

(அப்போது குறுக்கிட்டு பேசியவரை, நீ வாயை மூடுய்யா என்று கடிந்து கொண்டார்). நானும் பொம்பள, அந்த அம்மாவும் பொம்பள. நான் பேசிக்கிறேன். நானும் பிள்ளைய வச்சிருக்கேன். என் பிள்ளைக்கே இந்த ஆஸ்பத்திரியிலதான் இவருக்குகிட்டதான் பாக்குறேன். எதுக்கு இவ்ளே பேரை கூட்டிட்டு வந்திருக்க. உங்களுக்கு இங்க என்ன வேலை.

இவ்வாறு உரையாடல் நடக்கிறது. தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக பெண் டிஎஸ்பி பேரம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பில் பரவிய இந்த வீடியோவால் பொதுமக்களிடையே அதிர்ச்சியும் காவல்துறை மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது