திருமணத்திற்கு மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

திருமணத்திற்கு மறுத்ததால், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் வசித்து வரும் லிதியா (26) என்பவர், தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரியான ஜெயக்குமார் (30) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் தீவிரமாக தாலித்து வந்த நிலையில், லிதியா திருமணம் செய்து கொள்ளும்படி ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். ஜெயக்குமார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததோடு, லிதியாவை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து

இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு தொடர்பாக இருவரிடமும் ஸ்ரீராமபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையே, லிதியாவை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய ஜெயக்குமார் முயற்சித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் விஜயநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்ற லிதியா, ஜெயக்குமார் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும், ஜெயக்குமாரின் முகத்தில் பிளேடால் சரமாரியாக கீறிவிட்டு லிதியா சென்றுவிட்டார். இதனால், ஜெயக்குமாரின் முகம் ரத்த வெள்ளத்துடன் வெந்துப்போனது.

இதையடுத்து, ஜெயக்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், ஜெயக்குமார் சார்பில் விஜயநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று லிதியாவை கைது செய்தனர்.