இளம் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை: பெருங்களத்தூரில் பரபரப்பு

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுவாதி என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரை ஒருதலையாக காதலித்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

சுவாதி கொலை செய்யப்பட்டதுபோல சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். 2-வது மகள் சோனியா (வயது23), பிளஸ்-2 படித்துவிட்டு தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார்.

அவர் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டு, மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதற்காக பஸ்சில் தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பஸ்சில் இருந்து அவர் இறங்கியபோது மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் அவரை அழைத்தார்.

சோனியா அவருடன் செல்ல மறுத்ததால் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சோனியாவின் கழுத்தை அறுத்தார். இதைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சோனியா கழுத்தில் ரத்தம் வழிய மயங்கி விழுந்தார். அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சோனியாவை சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சோனியா பரிதாபமாக இறந்தார்.

சோனியாவை கொலை செய்த வாலிபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றார். அவர் அருகில் உள்ள பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

சோனியா வசித்து வந்த அதே தெருவில் சிகாமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் பிரசாந்த் (24) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்துவிட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஒரே தெருவில் இருந்ததால் பிரசாந்தும் சோனியாவும் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது.

இடையில் இவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார். பலமுறை பிரசாந்த் சோனியாவை பின்தொடர்ந்து வந்து தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் சோனியா பிரசாந்துடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

6 ஆண்டுகளாக சோனியாவை தான் காதலித்து வந்ததாகவும், ஆனால் தன்னை தவிர்த்துவிட்டு வேறு ஒரு வாலிபருடன் சோனியா பேசி வந்தார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது, என்னை அவமானப்படுத்தியதால் ஆத்திரத்தில் சோனியாவை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று பிரசாந்த் போலீசில் தெரிவித்தார்.

பிரசாந்த் தன்னுடைய முகநூலில் பிரசாந்த் சோனியா என்ற பெயரை சுருக்கி ‘பிரா சோனு’ என பதிவு செய்துள்ளார். சோனியாவை உயிருக்குயிராக காதலித்ததாகவும், தன் காதலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பீர்க்கன் காரணை போலீசார் அவரிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோனியா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் திரண்டு வந்து கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டது போல, அதே பாணியில் பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே சோனியா கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களை காதலிப்பதும், ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அவர்கள் பிரிந்து சென்றால் எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறியில் இளம்பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது துரதிர்ஷ்டவசமானது என இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.