தமிழர்கள் கலாசாரத்தை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: பிரதமர் மோடி உறுதி

சென்னை நகரில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று முழுஅடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது. உச்சகட்டமாக நடைபெறும் இந்த போராட்டத்தால் தமிழகமே குலுங்கியது.

இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க இருக்கிறது. இதற்காக முழு உதவியையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் தெரிவித்து இருந்ததாக முதல் அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி தெரிவித்துள்ள கருத்தில் தமிழர்கள் பண்பாட்டை காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது டுவிட்டரில் மோடி கூறியிருப்பதாவது:- “ தமிழக முன்னேற்றத்தில் மத்திய அரசு முழு அக்கறை செலுத்தி வருகிறது. தமிழகத்தின் உயர்ந்த கலாச்சாரம் குறித்து நாங்கள் பெருமை அடைகிறோம். தமிழக மக்களின் கலாச்சார லட்சியங்களை பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.