காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை: மத்திய அரசு கண்டனம்

காவிரி நதி நீர் வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி இருக்கிறது. இந்த தீர்ப்பை மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இருப்பினும் மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையை தீர்க்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை?

காவிரி ஒழுங்கு முறை வாரியத்தை அமைக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன? கர்நாடகா – தமிழகம் இடையே நிலவும் பிரச்சினையை தீர்க்க முன் வராமல் இருப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசின் வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், ”இதற்கு நேரடியாக பதில் அளிக்க விரும்பவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக‌ மத்திய அரசிடம் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்கிறேன்” என பதிலளித்தார்.

உத்தரவு

இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி முறையாக காவிரி நீர் திறக்கப்படாததால் தமிழக விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே கர்நாடக அரசு செப். 21-ம் தேதியில் இருந்து வரும் 27-ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி காவிரி நீரை திறந்துவிட வேண்டும். கர்நாடகா- தமிழகம் இடையே நிலவும் காவிரிப் பிரச்சினைக்கு காவிரி மேலாண்மை வாரியமே இறுதியான தீர்வாக இருக்கும். எனவே காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்.

தற்போதைய காவிரி மேற்பார்வைக் குழுவின் முடிவை இரு மாநிலங்களும் எதிர்ப்பதால், அதற்கான ஆட்சேப மனுவை வருகிற 27-ம் தேதிக்குள் இரு மாநிலங்களும் தாக்கல் செய்ய வேண்டும். பொதுவாக மழை குறைவான காலங்களில் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் இரு மாநிலங்களும் நிலைமையைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடகாவில் பதற்றம்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கண்டித்து கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் பெங்களூரு, மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். முதல்வர் சித்தரா மையா, வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமனின் உருவ பொம்மைகளையும் எரித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பதற்றம் ஏற்பட்டுள் ளதை தொடர்ந்து 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னட அமைப்பினரின் போராட்டத்தை கட்டுப்படுத்த‌ துணை ராணுவப் படை, மத்திய பாதுகாப்பு படை, கர்நாடக போலீஸார் என சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சியினர் எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்கக் கூடாது என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்தும், தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது குறித்தும் ஆலோசிப்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர், தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பதை நிறுத்திவிட்டு முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.