சம்பந்தம் பேச வரச்சொல்லி காதலனை வெட்டிக் கொலை செய்த காதலியின் தந்தை நெல்லையில் பரபரப்பு!

மகளின் காதலனை பெண் கேட்டு வருமாறு அழைத்து காதலனை பெண்ணின் தந்தையே கொலை செய்த சம்பவம் சங்கரன் கோவில் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி, தேவர்குளம் அருகே <உள்ள மேலஇலந்தைகுளத்தை சேர்ந்த லட்சுமணபெருமாள் மகள் கஸ்தூரி 29. நர்சிங் படித்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட பழனி மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றியுள்ளார். அப்போது திண்டுக்கல், விநாயகம் தெருவை சேர்ந்த சின்னகண்ணுவின் மகன் சிவகுருநாதனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரி வாலிபரான சிவகுருநாதன், மருந்து நிறுவனம் ஒன்றின் பிரதிநிதியாக பணியாற்றிவந்தார்.

இதனால் நர்ஸ், கஸ்தூரியிடம் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருவரும் சில ஆண்டுகளாக பழகியுள்ளனர். கஸ்தூரி அண்மையில் செங்கோட்டை மருத்துவமனைக்கு இடமாறுதலில் வந்தார். இது நாளடைவில் காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வரவே கஸ்தூரியின் பெற்றோர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்து விட்டனர். சிவகுருநாதன் தலித் என்பதால் எதிர்ப்பு கடுமையாகவே இருந்துள்ளது.

செங்கோட்டை வந்ததால் அவ்வப்போது செங்கோட்டைக்கு வந்து கஸ்தூரியை சந்தித்து பேசிவிட்டு சென்றுள்ளார் சிவகுருநாதன். செங்கோட்டைக்கு வந்த பிறகும் காதல் தொடர்ந்ததால் கஸ்தூரியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அவரது பெற்றோர் கடந்த சில நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென கஸ்தூரியின் தந்தை, கஸ்தூரியிடம் காதலுக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், சிவகுருவை பெண் கேட்டு வீட்டிற்கு வர சொல்லும்படி கஸ்தூரியிடம் சொல்லியிருக்கிறார். இதனை நம்பிய கஸ்தூரி சிவகுருநாதனிடம் பெண் கேட்டு வருமாறு செல்போனில் தெரிவித்துள்ளார். இந்த நயவஞ்சகத் தனம் தெரியாத சிவகுருநாதன், திண்டுக்கல்லில் இருந்து மாலை மேலஇலந்தைகுளம் வந்தார். அங்குள்ள கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கஸ்தூரியின் தந்தையிடம் பெண் கேட்டிருக்கிறார். அதற்கு கஸ்தூரியின் தந்தை தன் மகளை மறந்துவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த சிவகுருநாதனை கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார் கஸ்தூரியின் தந்தை. படுகாயம் அடைந்த சிவகுருநாதன் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கஸ்தூரியின் தந்தை போலீசில் சரண் அடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.