கருகிய பயிர்களை கண்டு மனம் நொந்த விவசாயி தற்கொலை முயற்சி

வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால், கருகிய பயிர்களை கண்டு மனம் நொந்த விவசாயி, கொடுமுடி அருகே, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வெங்கம்பூர் கிராமம், கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், 55. விவசாயி. இவருக்கு, மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. காளிங்கராயன் வாய்க்கால் தண்ணீரை நம்பி, மூன்றரை ஏக்கரிலும் மஞ்சள் பயிரிட்டுள்ளார். செப்.,12ல் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

பவானிசாகர் அணையில் தண்ணீர் குறைந்ததால், அக்.,9ல் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கிணறு, போர்வெல் வசதி இல்லாத நிலையில், காளிங்கராயன் வாய்க்காலை மட்டும் பாசனத்துக்கு நம்பியிருந்தார். தண்ணீர் கிடைக்காமல், மஞ்சள் செடிகள் வாடுவதை பார்த்து, மனைவி கலையரசியிடம், பத்து நாட்களாக புலம்பி வந்துள்ளார்.

நேற்று காலை வயலுக்கு சென்ற ராமலிங்கம், வாடிய பயிர்களை பார்த்துவிட்டு, மனம் நொந்துபோய், மஞ்சள் பயிருக்கு தெளிக்கப்படும் மோனகுரோட்டோபாஸ் மருந்தை, மதுவில் கலந்து குடித்துள்ளார். வயலில் மயங்கி கிடந்தவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அங்கிருந்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More