அரசு மருத்துவமனையில் மின்விசிறி பார்வையாளர்கள் மீது கழன்று விழுந்து காயம் ஏற்படுத்தியது

சென்னை  குழந்தையை கவனித்துக் கொள்ள பார்வையாளர்களாக அரச மருத்துவமனைக்கு சென்றவர்களின் தலைமீது, மின்விசிறி கழன்று விழுந்ததில், தற்போது  அவர்கள் காயத்துக்கு சிகிச்சை பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் உயிர் தப்பினர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் வேறு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு நேரமே சரியில்லை போல இருக்கிறது என்று அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் காரணமாக தூக்கம் தொலைத்த மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளவில்லை. காரணம் தினந்தோறும் பலர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேறு ஒரு வடிவில் திருவள்ளூர் மருத்துவமனைக்கு சிக்கல் வந்துள்ளது. அதாவது, திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு, காய்ச்சல் வார்டு, குழந்தைகள் வார்டு, பச்சிளம் குழந்தைகள் வார்டுகளில், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், பச்சிளம் குழந்தைகள் வார்டில் மட்டும் 25 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர். குழந்தைகளுடன் தாய் மற்றும் உறவினர் ஒருவர் தங்க வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை சிறப்பு வார்டில் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று கீழே விழுந்தது. இதில், மின்விசிறியின் கீழே குழந்தையை அணைத்தவாறு குனிந்தபடி உட்கார்ந்துகொண்டிருந்த ரங்காபுரம் கிரிஜா(30), அவரது மாமியார் துளசி(50) மற்றும் அமுதா(45), அவரது மகள் ராணி(22) ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், காயம் அடைந்த பெண்களுக்கு சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை மின் ஊழியர் வந்து, மின்விசிறியை எடுத்து சென்றுவிட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக பச்சிளம் குழந்தைகள் உயிர் தப்பினர். இதனால், அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘’அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து மின்விசிறிகளும் பராமரிப்பு இன்றி ஆடியபடி உள்ளது. பல வார்டுகளில் மின்விசிறி  காட்சிப் பொருளாக உள்ளது. எனவே, மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில், அனைத்து மின்விசிறிகளையும் பராமரிப்பு செய்ய வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.