பிரபல பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்!

பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.

மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ-விற்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் சோ உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் சோ உடல் தகனம் செய்யப்படுகிறது. சோ-விற்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். “சோ” என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடம் பெற்று தந்தது.

பிறப்பு: அக்டோபர் 5, 1934 அன்று சென்னையில் பிறந்தவர்.

பெற்றோர்: தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.

கல்வி: தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.

வழக்குரைஞர்: 1957 – 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே  கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.

நாடகமும்-இதழும்: 1957-ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970-ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976-ஆம் ஆண்டில் பிக்விக் ((PickWick) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

திரையுலக வாழ்க்கை: 14 திரைப்படங்களுக்கு கதை எழுதிய சோ, 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.

இவரது முகமது பின் துக்ளக் என்னும் ‘அரசியல் நையாண்டி’ நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

விருதுகள்: இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்) சேவைக்காக 1985-இல் ‘மஹாரான மேவார்’ வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-இல் வீரகேசரி விருதும், 1994-ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998-இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.

அரசியல்: முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பின‎ராக நியமனம் செய்யப்பட்டு 1999 – 2005 வரை பணியாற்றினார்.

இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று அதிகாலை 3.58 மணிக்கு சோ ராமசாமி காலமானார்.