சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு, முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு மற்றும் எல்எல்ஏக்கள் ஆதரவு அதிகரிக்கும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியால் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என அதிமுக இரண்டு பிரிவாக உள்ளது.

ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவளித்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ள மன்னார்குடி கோஷ்டி அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளது.

இருப்பினும் எம்எல்ஏக்கள் பலர் அங்கிருந்து தப்பி வந்து முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை உறுதியானதை அடுத்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு மட்டுமின்றி, மேலும் பல எம்எல்ஏக்கள் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க வரக்கூடும் என்பதாலும், தொண்டர்கள் வருவதாலும் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.