குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தொடங்கியது

தமிழகத்தின் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தண்ணீர் வரத்து இருக்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை உச்சத்தில் இருக்கும்போது, தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், குற்றால சீசன் களைகட்டவில்லை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துவருகிறது. நெல்லைமாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி,செங்கோட்டை ,கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த மழையின் காரணமாக தென்காசியில் 46.30மில்லி மீட்டர் மழையும்,செங்கோட்டையில் 29மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கிட்டத்தட்ட நான்கு வார காலம் தாமதமாகத் தொடங்கியுள்ளது. இதையடுத்து நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால், குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. பிரதான அருவியில் இன்று காலை முதல் மிதமான தண்ணீர் வரத்துத் தொடங்கியுள்ளது. மழை நீடிக்கும் நிலையில், தண்ணீர் வரத்து தொடர்ந்து சீராக இருக்கும் என்று குற்றாலவாசிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.