துபாயில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய வாலிபர் கைது

துபாயில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த 35 பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய இந்திய வாலிபருக்கு மூன்றுமாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

துபாயில் உள்ள கடையொன்றில் பொருட்களை டெலிவரி செய்யும் வேலைபார்த்து வந்த அந்த 23 வயது இந்திய வாலிபர், சம்பவத்தன்று பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு பொருட்களை கொண்டு சென்றுள்ளார்.

பொருட்களை தந்துவிட்டு, பணத்தை பெற்றுகொண்ட அவர், அங்கு தனியாக இருந்த 35 வயது பெண்ணை கட்டியணைத்து, பாலியல்ரீதியாக அத்துமீறினார். அவரை விலக்கித்தள்ளிய அந்தப் பெண், தொலைபேசி மூலம் போலீசை அழைக்க முயன்ற நேரத்தில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார்.

தனது கணவர் வீட்டுக்கு வந்ததும், இச்சம்பவத்தை அந்தப்பெண் கூறினார். இதையடுத்து, அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த வாலிபரை கைதுசெய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்தனர்.

ஆரம்பத்தில், தன்மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். அந்தப் பெண்ணிடம் நான் தவறாக நடக்கவில்லை. மது அருந்தும்படி என்னை அவர் வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்து விட்டதால் என்மீது போலியாக புகார் அளித்துள்ளார் என அவர் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு மூன்றுமாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தண்டனை காலம் முடிந்ததும், அவரை குடியுரிமைத்துறை அதிகாரிகள் நாட்டைவிட்டு வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.