’மேதகு’ என்ற வார்த்தையை உள்நாட்டில் பயன்படுத்த வேண்டாம்: வித்யாசாகர் ராவ்

மாநில முதல்வர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை அழைக்கும் போது, மரியாதை நிமித்தமாக பெயருக்கு முன்பாக ‘மாண்புமிகு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதே சமயம், ஜனாதிபதி, கவர்கள் மற்றும் பிரதமரை அழைக்கும் போது ‘மேதகு’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஆங்கிலேயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ’மேதகு’ என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் நீண்ட காலமாகவே இருந்து வந்த நிலையில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த 2012 ஆம் ஆண்டு, ‘மேதகு’ என்ற வார்த்தையை உள்நாட்டு நிகழ்ச்சிகளிலும், உள்நாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போதும்  மற்றும் கடித போக்குவரத்தின் போதும் பயனபடுத்த வேண்டாம், என்று உத்தரவிட்டார்.

ஆனால், வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் போது ‘மேதகு’ என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், இதே உத்தரவை தமிழக கவர்னர் வித்யாசகர் அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இது குறித்து தமிழக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரசு விழாக்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்களில் கவர்னரை மரியாதையுடன் அழைக்க பயன்படுத்தப்பட்டு வரும் மேதகு கவர்னர் என்ற வார்த்தையை இனி பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மாண்புமிகு கவர்னர் என்ற வார்த்தையை அடைமொழியாக பயன்படுத்தும்படி, கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிவுறுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், அயல்நாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது, மேதகு என்ற அடைமொழி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.