பீட்டா போன்ற அமைப்புகளை தடை செய்யக் கூடாது: கமல் ஹாசன்

ஜல்லிக்கட்டுக்கும், அதற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து வந்த நடிகர் கமல்ஹாசன், பீட்டாவை தடை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தி எதிரொலியாக, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்கான அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், இந்த போராட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்க தொண்டு நிறுவனமான பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் கலவரம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசனிடம், பீட்டாவை தடை செய்வது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “பீட்டா போன்ற அமைப்புகளை தடை செய்யக் கூடாது. காரணம், அவர்கள் வேறு ஒரு பெயரில் வருவார்கள். அதனால், பீட்டாவின் செயல்களை முறைப்படுத்த வேண்டும்.

விலங்குகளுக்கு ஒரு அமைப்பும், விலங்கு நல ஆர்வலர்களும் கண்டிப்பாக தேவை. ஆனால், அவர்களின் செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.