மு. க. ஸ்டாலின் திருச்சியில் உண்ணாவிரதம் தொடங்கியது!

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தாததைக் கண்டித்து, திருச்சியில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை 9 மாணிக்கு தொடங்கியது. எடப்பாடி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பின் போது திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் தாக்கப்பட்டார். அவரது சட்டை கிழிக்கப்பட்டது. பல உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது. சட்டமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்த மு.க.ஸ்டாலின், மெரினாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதையடுத்து மாவட்டத் தலைநகரங்களில் இன்று திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வள்ளுவர் கோட்டம் அருகிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது.