இந்த தீபாவளி ரூ.243 கோடிக்கு மதுபான கடைகளில் அமோக விற்பனை

ஈரோடு: தீபாவளியை குடிமகன்கள் ஊத்தி கொண்டாடி அசத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாளில், 14 கோடி ரூபாய்க்கு மது விற்று, குடிமகன்களின் கொண்டாட்டத்தை பறை சாற்றியுள்ளது.

பட்டாசு இல்லாத தீபாவளியா என்பதை, இனி வரும் காலங்களில், மது அருந்தாத தீபாவளியா? என்று மாற்றிச் சொல்லும் அளவுக்கு, குடிமகன்கள் சரக்கை குடிப்பது அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்ட குடிமகன்கள், இந்த ஆண்டு தீபாவளியை கொண்டாடி தீர்த்துள்ளனர். இரண்டு நாளில், மொத்தம், 14 கோடி ரூபாய்க்கு மது விற்றுள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 11.2 சதவீதம் அதிகம் என்று, அதிகாரிகள் பெருமிதம் கொள்கின்றனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பாலாஜி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், ஒரு எலைட் கடை உட்பட, 255 டாஸ்மாக் கடைகள் உள்ளன, இதில், 142 கடைகளில் பார் உள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் ஆறு கோடிக்கும், தீபாவளி நாளில், 7.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. பீர் பாட்டில்கள், 4,000 பெட்டிகள் விற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மொத்தத்தில் அரசு கடைகளை குறைத்தாலும், விற்பனை குறையவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.