ஒடிசா வங்கியில் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொள்ளை

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி வங்கிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வங்கிகளில் டெபாசிட் செய்வதற்காக ஏராளமான பழைய நோட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த பணம் அனைத்தும் முறையாக சரிபார்த்து வாங்கப்பட்டு பத்திரப்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் தேன்கனால் நகரில் உள்ள ஒடிசா கிராம்ய வங்கி கிளையில் வைக்கப்பட்டிருந்த டெபாசிட் பணம் திருடப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் இன்று வங்கி திறக்கப்பட்டது. ஊழியர்கள் பணம் இருந்த அறைக்குசென்று பார்த்தபோது மொத்தம் உள்ள 8 கோடி ரூபாய் பழைய நோட்டுக் கட்டுக்களில் ஒரு இரும்பு பெட்டியில் இருந்த ரூ.1.15 கோடியை மட்டும் காணவில்லை. இவை அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

பாதுகாப்பான அறையில் இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனதால், வங்கி ஊழியர்களின் துணையில்லாமல் கொள்ளை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தேன்கனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேன்கனால் நகர் காவல் நிலையத்திற்கு மிகவும் அருகாமையில், கொள்ளை நடந்த இந்த வங்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.