எய்ம்ஸ் மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணன் மரணம் கொலை வழக்காக பதிவு

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணன் மரண வழக்கை கொலை வழக்காக டெல்லி போலீஸ் 302வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

திருப்பூர் கோபால் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சரவணன். இவர், மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்த மேல்படிப்புக்காக கடந்த ஜனவரி மாதம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். கடந்த ஜூலை 10ம் தேதி சரவணன், தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர், விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதனையடுத்து மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று சரவணனின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். எங்களது மகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடந்த நவம்பர் 4ம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பினோம். பின்னர் இதுகுறித்து முறைப்படி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தமிழ்நாடு முதன்மை செயலர் அலுவலகத்திற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை நடத்த, தமிழக அரசு எங்களுக்கு உதவவேண்டும். மேலும் இதுகுறித்து ஓரிரு நாட்களில் புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் டெல்லி போலீசார் கொலை வழக்கை பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் எங்களுக்கு டெல்லி போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்நிலையில் சரவணன் மரணம், கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 302வது பிரிவின் கீழ் சரவணனின் மரண வழக்கை கொலை வழக்காக டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். சரவணனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமா? அவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்குமா என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகும்.