90 பெண்களை ஏமாற்றி விபச்சாரத்திற்கு விற்ற 2 பேர் சென்னையில் கைது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 90 பெண்களை வேலை வாங்கி தருவதாக கூறி விபச்சார தொழிலுக்கு விற்பனை செய்த, இரண்டு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அளித்த புகாரில், “தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சென்ற பிறகுதான் விபசாரத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். என்னால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. 10 ஆண்டுகள் வரை விபசார தொழிலில் என்னை ஈடுபட வைத்து ஒரு கும்பல் பணம் சம்பாதித்தது. அதன் பிறகு என்னை விபசாரத்துக்கு லாயக்கு இல்லை. வயதாகி விட்டது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.

என்னைப்போல் பலபெண்களை இதுபோல் ஏமாற்றி வெளிநாடுகளில் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். அவர்களை மீட்கவும், இனியும் பெண்கள் ஏமாறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு” தெரிவித்திருந்தார்.

மேலும், விபச்சாரத்திற்கு பெண்களை விற்பவர்களின் பெர்யர்கள் மற்றும் அவர்களது விவரத்தையும் அந்த பெண் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அதில் சென்னையைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் 2 பேர் இடம் பெற்றிருந்தனர். இதையடுத்து சித்தூர் போலீசார் சென்னை வந்து முகாமிட்டு ரகசியமாக விசாரணை நடத்தி ரபி, பாண்டியன் என்ற 2 பேரை கைது செய்தனர்.

இவர்கள் இருவரையும் ஆந்திர போலீசார் சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரபியும், பாண்டியனும் சித்தூர் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் புரோக்கர்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை என்று பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி தேர்வு செய்வார்கள். குறிப்பாக வறுமையில் வாடும் இளம் பெண்கள், கணவரைப்பிரிந்து வாழும் பெண்கள், விதவைகள் போன்ற பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பெண்களை சந்தித்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி வெளிநாடுகளில் விபசாரத்துக்கு விற்று விடுவார்கள்.

இதுபோல், மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் ஆந்திராவைச் சேர்ந்த 90 பெண்களை விற்பனை செய்திருப்பதாக ரபியும், பாண்டியனும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த 2 பேருக்கும் கீழ் ஆந்திராவில் 40-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களது பெயர் விவரங்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த கும்பலிடம் சிக்கி வெளிநாடுகளில் தவிக்கும் பெண்களின் விவரங்களை சேகரித்து அவர்களை மீட்கவும் ஆந்திர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.