ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனைக்கு 11 புதிய சலுகைகள்

ரொக்கமில்லா மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்துக் கொண்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, செல்லிடப்பேசி செயலிகள், மின் பணப்பை (இ-வாலட்) போன்ற மின்னணு பரிவர்த்தனைகளுக்கு பொதுமக்கள் மாற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக, 11 புதிய சலுகைகளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் வியாழக்கிழமை அறிவித்தார். அதன் விவரம்:

 1. பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையங்களில் மின்னணு பரிவர்த்தனை மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
 2. 10 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு லட்சம் கிராமங்களுக்கு தலா 2 ஸ்வைப்பிங்கள் இயந்திரங்கள் வழங்கப்படும்.
 3. விவசாயக் கடன் அட்டைகளை வைத்திருக்கும் 4.32 கோடி விவசாயிகளுக்கு நபார்டு வங்கிகள் மூலமாக “ரூபே கிஸான்’ அட்டைகள் வழங்கப்படும்.
 4. மின்னணு பரிவர்த்தனை மூலம்,ரயில்வே மாதாந்திர அல்லது சீசன் டிக்கெட் வாங்குவோருக்கு 0.5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
 5. இணையவழி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலான இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படும்.
 6. ரயில்வே துறையில் வழங்கப்படும் உணவு, தங்குமிடம், ஓய்வறை ஆகியவற்றுக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்துவோருக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
 7. புதிதாக எல்.ஐ.சி. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேருவோர், இணைய வழியில் பணம் செலுத்தினால் 8 சதவீத தள்ளுபடியும், தவணைத் தொகையை செலுத்துவோருக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.
 8. இணையவழியில் செலுத்தப்படும் தொகைக்கு பரிவர்த்தனைக் கட்டணம் மற்றும் வர்த்தகர்களிடம் வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு வசூலிக்காது.
 9. நாடு முழுவதும் வணிகர்களுக்கு வங்கிகள் வழங்கியுள்ள 6.5 லட்சம் ஸ்வைப்பிங் மற்றும் மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களுக்கு மாத வாடகையாக, ரூ.100க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்படமாட்டாது.
 10. ரூ.2,000-க்கும் குறைவான மின்னணு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி விதிக்கப்படாது.
 11. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஆர்எஃப்ஐடி கார்டு அல்லது ஃபாஸ்ட் டேக் கார்டுகள் மூலம் சுங்கக் கட்டணம் செலுத்துவோருக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.