ஜல்லிக்கட்டு போராட்டம்: ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் தற்போது ஒட்டு மொத்த தமிழகத்தில் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் பரவியுள்ளது.

மும்பை தாராவியில் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் அல்லாத பிரபலங்களும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் கிரிக்கெட் வீரர் முகமது கைப் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழகத்தில் நடைபெறும் போராட்டம் அமைதி வழியில் செல்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அமைதி வழியை தொடருங்கள். இந்த அறப்போராட்டம் எல்லோருக்கும் பாடம், என்று தெரிவித்துள்ளனவர், தமிழகத்தில் உச்ச நீதிமன்றத்தை மதித்தபடியே, நடைபெறும் அமைதி போராட்டம் பற்றிய போட்டோ மீம் ஒன்றை ரீடிவிட் செய்துள்ளார். அந்த மீமில் தேசிய ஊடகங்கள் இப்போராட்டத்தை புறக்கணிப்பது குறித்து, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை தமிழர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது பிற மாநிலத்தைச் சேர்ந்த பிரபலங்களும் குரல் கொடுப்பதால், இந்த போராட்டம் இனி சர்வதேச அளவில் பேசப்படும் அளவுக்கு வீரியம் அடைந்துள்ளது.