வீட்டு காஸ் சிலிண்டர் 7வது முறையாக உயர்வு

வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை,  அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப மாதத்துக்கு இரண்டு முறை பெட்ரோல் மற்றும் டீசல்  விலையை இந்தியா மாற்றி அமைக்கின்றன.  இந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசு உயர்த்தப்பட்டது. டீசல் லிட்டருக்கு 12  காசு குறைக்கப்பட்டது.

ஆனால் விமான பெட்ரோல் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,881 குறைக்கப்பட்டு, ரூ.48,379.63 ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் இது 3.7 சதவீதம் சரிவு. தொடர்ந்து 2 முறை உயர்த்தப்பட்ட பிறகு இந்த  விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர், ஆண்டுக்கு 12 எண்ணிக்கையில் மானிய விலையில்  வழங்கப்படுகிறது. இதற்கான மானியம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. மானியச்சுமையை குறைக்க சமையல் காஸ்  விலையை மாதம் 2 ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதன்படி சமையல் காஸ் சிலிண்டர் ரூ.2.07  உயர்த்தப்பட்டுள்ளது.

இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 7வது முறையாக விலை அதிகரித்துளளது.  டெல்லியில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் ரூ.430.64ல் இருந்து ரூ.432.71 ஆகவும், சென்னையில் ரூ.418.14 ல் இருந்து ரூ.420.21ஆகவும்  உயர்ந்துள்ளது.

ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் சந்தை விலையில் காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும். இதுவும் ரூ.54.50 உயர்ந்துள்ளது டெல்லியில் ஒரு  சிலிண்டர் ரூ.529.50ல் இருந்து ரூ.584 ஆகவும், சென்னையில் ரூ.538.50ல் இருந்து ரூ.593.50ஆகவும் அதிகரித்துள்ளது.  இதுபோல்  மண்ணெண்ணெய் விலை மாதத்துக்கு இரண்டு முறை லிட்டருக்கு 25 காசு வீதம் 10 மாதத்துக்கு உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி  தறே்பாது 9வது முறையாக மண்ணெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.17.51. ஆனால்,  பொதுவிநியோக திட்டத்தில் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படவில்லை.