ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்புபவர்களை கைது செய்வது மூலம் தீர்வு காண முடியாது: எச்.எல்.தத்து

முதலமைச்சரின் உடல்நிலை குறித்துக் கருத்துத் தெரிவிப்பவர்களைக் கைது செய்வது தவறானது என, தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் எச்.எல்.தத்து தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன நாள் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அந்த ஆணையத்தின் தலைவர் எச்.எல்.தத்து, தமிழக முதலமைச்சரின் உடல்நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்தவர்களை, கைது செய்திருப்பது தவறானது எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சரின் உடல்நிலை தொடர்பாக வதந்தி பரவாமல் தடுக்க வேண்டியது, அரசின் கடமை என்றும் எச்.எல்.தத்து கூறினார்.

ஆந்திர மாநிலத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டதாகத் தெரிவித்த அவர், இந்த உத்தரவுக்கு அம்மாநில அரசு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தடையை நீக்கக் கோரி மனித உரிமைகள் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தடை நீக்கப்படும்போது 20தமிழர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும் என்றும் எச்.எல்.தத்து மேலும் தெரிவித்தார்.