கோவை பேராசிரியை கொலை வழக்கு, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

பேராசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், காரமடை அடுத்த ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் ரம்யா, 24; கிணத்துக்கடவு தனியார் கல்லுாரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்தார். 2014, நவ., 3ல், கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய போது, பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன், வீடு புகுந்து, ரம்யா, தாய் மாலதி ஆகியோரை கட்டையால் தாக்கியதில், இருவரும் மயங்கினர். நகைகளை பறித்து, ரம்யாவை பாலியல் பலாத்காரம் செய்ததில் அவர் இறந்தார்.

போலீசார் விசாரித்து, பாப்பநாயக்கன் பாளையத்தில், கட்டட வேலை பார்த்து வந்த, திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரத்தேரியை சேர்ந்த மகேஷ், 30, என்பவனை, 2015 ஜனவரி மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. இவன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி என, கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்; தண்டனை விபரம், இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று நீதிபதி அளித்த தீர்ப்பில், கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு தண்டனையும், பாலியல் குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், அத்துமீறி உள்ளே நுழைந்ததற்காக 6 வருடமும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மகேஷ் மீது நெல்லையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அங்கு, பாலியல் புகாரில் கைதாகி பின்னர் குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டான். தற்போது, அவன் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளான்.