மதங்கள் தாண்டி மனங்கள் பேசும்  ‘அன்பா… அழகா…’

மதங்கள் தாண்டி மனங்கள் பேசும்  ‘அன்பா… அழகா…’

மதங்கள் தாண்டி மனங்கள் பேசும் 'அன்பா... அழகா...'

மதங்கள் தாண்டி மனங்கள் பேசும்  ‘அன்பா… அழகா…’ கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அன்பா அழகா சொன்னால் எந்தவித பிரச்சனையும் தீர்த்து வைக்க முடியும். நம் இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு. இங்கு எத்தனையோ மதங்கள், மொழி, கலாச்சாரங்கள் இருக்கின்றன. இருந்தாலும் எல்லாருமே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்து கொண்டு இருந்ததனால்தான் இருப்பதால்தான் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது.

இரு மதம் சார்ந்த குடும்பத்தினர் இப்படி அன்பாக அழகாக இருக்கிறார்கள். அங்கே தோன்றிய காதலால் ஒரு பிரச்சனை முளைக்கிறது. அப்போது தீர்த்துக் கொள்கிறார்களா என்பதுதான் ‘அன்பா…அழகா…’ படத்தின் கதை.

ஃபுட் புரொடஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 3வது படம் இது. ‘மறந்தேன் மெய் மறந்தேன்’,’சொல்லித் தரவா’ படங்களைத் தொடர்ந்து எஸ்.சிவராமன் இயக்கும் படம்.

‘மர்மதேசம்’ டிவி தொடர் புகழ் இயங்குநர் நாகாவின் மகன் ஆகாஷ் பிரபு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் பைலட் பயிற்சி முடித்தவர்.

ப்ரீத்தி ஷங்கர் புதுமுக நாயகி இவர் ஒரு டென்டிஸ்ட் லாவண்யா இன்னொரு கதாநாயகி.இவர் ‘பூவம்பட்டி’,’கலவரம்’ படங்களைத் தொடர்ந்து நடிக்கும் 3வது படம்.

‘இதுவரை ஓர் இளைஞனின் காதல் வெற்றிபெற 4 இளைஞர்கள் பாடுபடும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். இப்படத்தில் ஒருத்தியின் காதல் ஜெயிக்க இன்னொரு பெண் உதவி செய்வதைப் பார்க்கலாம்’ என்கிறார் இயக்குநர்.

‘ஒரு குடிம்பத்தில் எல்லாரும் அன்பாக பற்றுதலோடு இருக்கும்போது யாரோ ஒருவர் சொல்வதை மட்டும் எல்லாருமே தட்டமாட்டார்கள். சொன்னால் கேட்பார்கள் அப்படி ஒருவன்தான் நம் நாயகன்.

இதில் இரு மதங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க நல்லவிதமாக படத்தில் காட்டப்படும் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி மதங்கள் கடந்த அன்பையும் அழகையும் சொல்லும்படி இருக்கும்’ என்று கூறுகிற இயக்குநர். தனக்கு வாய்த்த மதங்களாக கடந்து மனம் கவர்ந்த நண்பர்கள்தான் இப்படம் எடுக்க சிந்திக்க வைத்தவர்கள்’என்றார்.

சிறுபாண்மை,பெருபாண்மை மத உணர்வு என்றெல்லாம் நம்முன் கூறுபோட நினைத்திட ஆயிரம் சதிகள் நடந்தாலும் நாம் இந்தியர் என்கிற உணர்வுதான் நம்மை நிம்மதியாக வாழ வைத்து இணைக்கிறது. இது படத்தில் காட்டப்பட்டுள்ளது.

நேசத்தின் பெருமையை மட்டுமல்ல தேசத்தின் பெருமையும் பேசுகிற படமிது.

முழுக்க முழுக்க புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகும்’அன்பா… அழகா…’ படத்தின் ஒளிப்பதிவாளர் கவின் சுரேஷ். இவர் ஸ்டில் போட்டோ கிராபராக இருந்தவர். ஏராளமான விளம்பரப் படங்கள் எடுத்திருப்பவர்.

இசையமைபாளர் புதியவர் பெயர் அருள் முருகன் படத்தின் 5 பாடல்கள், ‘வேணான்னு சொன்னடா’ என்கிற ஒரு குத்துப்பாடலை சிம்பு பாடியதுடன் பாராட்டியுள்ளார். பாடல் பிடித்துப் போகவே சிம்பு பாடிக் கொடுத்துள்ளார்.

படத்தின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முக்கிய இடம் வகிக்கிறது. இதர்காக் சென்னையில் நடந்த ஊர்வலத்தை ஏராளமான மக்களோடு கலந்து படமாக்கியுள்ளார்.

ரெட் Mx. கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. மிகை வெளிச்ச மின்றி கிடைக்கிற இயற்கை ஒளியில் காட்சிகள் துல்லியமாக பதிவாகியுள்ளது. யதார்த்த முயற்சி.

இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த கதை சென்னைதான் கதையின் தளம் என்றாலும் சென்னை தாண்டி திருச்சி,கடலூர் என்றும் சென்று காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடல் காட்சிகளுக்கு டார்ஜிலிங்,கோவா செல்ல உள்ளார்கள்.

சென்னையில் பல இடங்களில் பின்புலத்தில் நகரும் மக்களையும் அறியாமல் அவர்களை இடம் பெற வைத்துப் படப்பிடிப்பு ‘லைவ்’ ஆக நடந்துள்ளது. படத்தில் செட் என்பதே இல்லை. இதில் இடம் பெறும் தெருக்களும் கூட உண்மையானவை. செயற்கைப் பூச்சு இல்லாதவை.

படம் தொடங்கும்முன் மொத்த படக்குழுவினருக்கும் ‘புரிந்து கொள்ளுதல்’ பயிற்சி அளித்து ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.

‘வேணான்னு சொன்னாடா’ சிம்பு பாடிய பாட்டு நிச்சயம் கலக்கும்’ என்கிறார் இசையமைப்பாளர், அருள் முருகன்.

நடித்தவர்களில் பலர் புது முகங்கள், என்றாலும் அனைவருமே தங்களிடம் இயக்குநர் நட்டுடன் அணுகி ஊக்க மூட்டி வேலை வாங்கியதாக் கூறுகிறார்கள்.

படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பாடல்கள் மெலடி,குத்து,கிராமியம்,தத்துவம் என்று வகைக்கு ஒன்று உண்டு.

அன்பை சொல்லும் படமிது.அழகை பேசும் படமும் கூட எனவே வழக்கமான கதாநாயகனுக்குரிய செயற்கை திணிப்புகள் – கதாநாயகத்தனம் இதில் இருக்காது என்கிறார் இயக்குநர்.

பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. சில பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளன.

ஃபுட் ஸ்டெப் புரொடஷன்ஸ் தயாரிக்கும் ‘அன்பா… அழகா…’

தொழில் நுட்ப கலைஞர்கள்.

கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் – எஸ்.சிவராமன்

ஒளிப்பதிவு – கவின் சுரெஷ்,இசை – அருள் முருகன்

பாடல்கள் – கலைக்குமார்,நீலமேகம்,தினேஷ்,ஜெயராம்

நடனம் – பிரபு, படத்தொப்பு – அனில்மல் நட்

தயாரிப்பு மேற்பார்வை – ஏ.எம்.சம்பத்குமார்

பிரபலங்களின் குரு, சௌம்யா மதன கோபால்

விதையில் விருட்சத்தை ஒளித்து வைத்திருப்பதைப் போல எல்லாரிடமும் ஒரு திறமையை ஒளித்து வைத்திருக்கிறான் இறைவன்.

ஆனால் சிலர் மட்டுமே தன்னிடம் உள்ள திறமையைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் சௌம்யா மதன கோபால். இவர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமல்ல பல்துறையில் பன்முகத்திறமை பெற்றவர்.

இவர் ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர். இது நாடறிந்த நல்ல முகம். இது மட்டுமல்ல பாடகி,சபா கச்சேரி நடத்துனர், ஒவியக் கண்காட்சி நடத்துநர்,கர்நாடக இசைக்கலைஞர்,வீணை வித்துவான்,குரல் பயிற்சியாளர்,இசையாசிரியை,தடகள வீராங்கனை,வெளிநாட்டு விருது வென்ற வெற்றியாளர் என்று இவரது பல முகங்கள் வியப்பூட்டுகின்றன.

இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் சௌம்யா மதன கோபால். பிரபல இசைமேதை ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களின் தங்கை மகள்தான் இந்த சௌம்யா. கர்நாடக இசைப் பின்னணியில் பிறந்த சௌம்யாவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். அதுமட்டுமல்ல இந்துஸ்தானி இசையின் செழுமையில் மனதைப் பறிகொடுத்தார். நாட்டமும் சென்றது.

கர்நாடக இசை குடும்ப சொத்தாக வீட்டிலேயே இருந்தது. எனவே தன் தாயாரிடமே கற்றுக் கொண்டார். கூடுதல் செல்வமாக வடஇந்திய பாரம்பரிய இசையான இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டார். இதற்காக வடநாட்டு பண்டிதர்களிடம் பாடம் பயின்றார். குரு கிருஷ்ணானாந்த். இவரது முக்கிய ஆசான், முகமது உசேன்கான்,விஸாம்பர் நாத் சர்மா, மீரா சவூர் இவரது திறமையை வளப்படுத்தியவர்கள்.

சௌம்யாவின் இசையார்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கிருஷ்ணானந்த் இந்துஸ்தானியின் ஆழ அகலங்களை சொல்லிக் கொடுத்தார். 1980ல் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த சௌம்யா, ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். இவர் காலடி படாத சபாக்களே இல்லை என்று கூறுமளவுக்கு இசை பரப்பியுள்ளார். ஜெர்மன் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கச்சேரி செய்துள்ளார். மொழி தெரியாத வெளி நாட்டினரும் இவரது இசையில் ராக ஆலாபனையில் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள்.

இவரது இசை ஈடுபாடு நாடகளுக்கு இசையமைக்கும் வாய்ப்பில் கொண்டு போய் நிறுத்தியது. நவீன நாடகங்களில் இவரது பங்களிப்பு கணிசமான அளவில் இருந்தது. சபா நாடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நவீன நாடகங்கள், நவீன நாடகங்களை தன் இசையால் ஜனரஞ்சகப்படுத்தி மக்கள் வயப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. பிரிட்டிஷ் கவுன்சில் மாக்ஸ் முல்லர் பவன்,பிரெஞ்சு கலாச்சாரக் கழகம் போன்றவற்றில் நவீன நாடகங்கள் நடத்துவோர் தங்களின் படைப்புகளுக்கு இசையமைக்க சௌம்யாவையே நாடுகிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் பாலமாக் இருக்கிறார் சௌம்யா.

வீணை நன்றாக வாசிக்கும் இவரது குரு வீணை வித்துவான் பிச்சுமணி.

தன் ராக ஆலாபனைகளால் ரசிகர்களின் செவிகளில் புகுந்து இசையோவியம் தீட்டும் இவர். நிஜ ஒவியரும் கூட, அந்தோணிதாஸ். எச்.வி.ராம் கோபால் போன்ற ஓவிய மேதைகளிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். சென்னையில் பல இடங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார் இவரது சிறப்பு உருவப் படங்கள் (Portrait) வரைவது. இத்துறையில் தனி ஈடுபாடு இவருக்கு இசையால் செவிகளுக்கும் ஓவியத்தால் கண்களுக்கும் விருந்தளித்து வரும் இவர். கருத்தால் உள்ளங்களுக்கும் உவகை அளிப்பவர். கல்லூரி நாட்களில் பேச்சு போட்டி கட்டுரைப் போட்டிகளில் பரிசுகளை அள்ளியவர்.

இந்துஸ்தானி பாணியில் மிகவும் கடினமாக பிரிவுகளை சுத்த சாரங் ராகத்தில் சற்றும் சளைக்காமல் இலகுவாக் வழங்கி ரசிகர்களை ஈர்ப்பது இவருக்கு கை வந்த கலை பஜன்கள் பாடி சங்கீத கலைஞர்களை ஒரு புனித உலகத்துக்கு அழைத்து செல்வதில் அலாதி பிரியம் இவருக்கு, குறிப்பாக மீராபாய் பஜன் பாடும் போது கேட்பவர் மனம் அள்ளும்.

தன் இன்பமும் ஈடுபாடும் அனுபவமும் தன்னுடன் நின்று விடக் கூடாது என்று நினைத்த சௌம்யா, “ராகசுரபி” என்கிற இசைப்பள்ளி தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்துஸ்தானி இசையை கற்பித்து வருகிறார். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ இப்பள்ளியை ஒருகல்லூரியாக வளர்க்கும் கனவுடன் இருக்கிறார்.

இவரது மறக்க முடியாத கச்சேரி ?

‘எனது இந்துஸ்தானி இசைக் கச்சேரி சீனிவாச சாஸ்திரி ஹாலில் நடந்தது. கர்நாடக சங்கீத உலகின் ஜாம்பவாங்கள் செம்மங்குடி சீனிவாச ஐயர், மறைந்த இசை மேதை புரொஃபஸர் எஸ்.ராமநாதன், திரு.ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றவர்கள் முன்னிலையில் கச்சேரி நடந்தது. அவர்களின் முன்னால் செம்மங்குடி மேடையேறி வந்து பாராட்டியது பெரும் பாக்கியம்’ என்றார்.

சௌம்யா மதன கோபால் குறிப்பிடும் இன்னொரு அனுபவம்…
‘முஸ்லீம் அசோசியேஷன் ஆஃப் மதராஸ் சிட்டி சார்பில் ஒரு கஜல் கச்சேரி, பாகிஸ்தானின் கஜல க்வீன் முன்னி பேகம் முன்னிலை அது மிர்ஸா காலிப் பின் நூற்றாண்டு விழா. ரசிகர்களை கஜல் இசையில் ஊறியவர்கள். அவர்கள் மத்தியில் நான் பாடியது மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர்கள் விரும்பிக் கேட்ட குலாம் அலியின் ‘கப் கே கப்கே ராத்மே…’ மெஹ்தி ஹசனின் ரஞ்சீஷி சங்கித் யமன் கல்யாணி ராகத்தில் , பிறகு ரூறா லைலா இன் கஜல்கள் – பூப் ராகத்தில், மோகனராகம் – பாத் கஹீமுஜே முஷ்கில்’ எல்லாம் நான் மெய்மறந்து பாடியவை. இன்று நினைத்தாலும் இனிக்கிறது’ என்றார் சிலிர்ப்புடன்.

கர்நாடக இசையில் பிறந்து வீணை வாசிப்பில் இந்துஸ்தானி இசையில் வளர்ந்து சிறந்தவர் சௌம்யா மதன கோபால். இன்று தன் திறமையால் பல உயரங்ககளைத் தாண்டியுள்ள இவர் பள்ளி நாட்களில் உயரம் தாண்டுதலில் (High Jump) மாநில அளவிலான பரிசுகளைக் குவித்தவர்.

பல இசை மேதைகளைச் சந்தித்தது போல மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரைச் சந்தித்ததும் இவரால் மறக்க முடியாதது. ஆதிபராசக்தி மேல் பாடல்கள் பாடி பங்காரு அடிகளால் வெளியிடச் சொன்னார். இவரும் 4 ஒலிப்பேழைகள் வெளியிட்டுள்ளார்.

‘கங்கா’ என்கிற குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடியுள்ளார். இதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு ‘கிராண்ட் ப்ரி’ என்கிற விருதை சௌம்யாவுக்கு வழங்கியுள்ளது.

‘இலக்கணம்’ தமிழ்த் திரைப்படத்திலும் பாடி இருக்கிறார். ‘வோடபோன்’ மொபைல் நிறுவனத்துக்காக திருக்குறளை இசை கலந்து பாடியுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக கச்சேரிகள் செய்து வரும் இவர், பல மாணவிகளை உருவாக்கி வளர்த்து வருகிறார் பிரபல பின்னணிப் பாடகர்களாக இருக்கும் ஷாலினி,ஹரிசரண்,மதுமிதா,பவதாரணி போன்றவர்கள் இவரது தயாரிப்புகளே இவர் கஜல்,பஜன்,மராட்டிய அபங்க் போன்ற இசை வடிவங்களையும் தன் கச்சேரிகளில் வழங்கி வருகிறார்.

இவரது வளர்ச்சிக்கும் புகழுக்கும் பெருமைக்கும் பின் நின்று ஊக்கப்படுத்தும் கணவர் மதனகோபாலின் அன்பையே காரணமாக கூறுகிறார். எனவே கச்சேரிகளில் பாடமட்டுமல்ல நிஜத்திலும் கூற முடிகிறது. ‘குறையொன்றுமில்லை’ என்று.

மன்னிக்க வேண்டுகிறேன் சினிமா பாடகர் உன்னிகிருஷ்ணன்

பிரபல கர்நாடக இசைக் கலைஞரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான உன்னி கிருஷ்ணன் தமிழ் மக்களிடம் ” மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் ‘ என்று கூறியுள்ளார்.

பாடகர் உன்னிகிருஷ்ணன் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது.

” நான் சுமார் 20, 25 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கிறேன். நன் பல்வேறு ஊர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகள் செய்து வருகிறேன். மேடையிலும் பாடி வருகிறேன்.

இப்படி சென்ற நாடுகளில் நான் முதலில் ஆஸ்திரேலியா செல்கிற வாய்ப்பையும் லண்டன் செல்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாழ்பாணத் தமிழர்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அப்படி ஒரு ஒரு அன்பான் அழப்பில்தான் அண்மையில் யாழ்பாணம் சென்று இருந்தேன்.அங்குள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க “ஸ்வானுபவ ” அமைப்பு இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது. இதன் அமைப்பாளர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள ராமநாதன் இசைப் பள்ளியிலும் ஒரு சந்திப்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவுரை ஆற்றவும் திட்டம். என்று கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் யாழ்பாணம் சென்றேன். கச்சேரி அழகாகப் போனது ஆனால் அங்கு எதிர்பாரத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அங்கு வந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எனக்குப் பொன்னாடை போர்த்தினார். இது தமிழ் மக்களின் மனதின் வெகுவாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த சம்பவம் நன் முற்றிலும் எதிபாராத ஒன்றாகும். அவர் கலந்து கொள்வார் என்பது எனக்குத் தெரியாது. அழைப்பிதழில் அவர் கலந்து கொள்வார். என்றெல்லாம் போடவில்லை.திடீர்றென்று வந்தவர் அவர். ஆனால் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவர் தமிழமக்களால் வெறுக்கப்படும் ஒருவர் என்பது இந்த சம்பவம் எதிர்பாராததுதான் என்றாலும் இதற்காக நன் மிகவும் வருத்தம் அடைகிறேன். என் இசைப் பயணத்தில் இதை ஒரு கரும்புள்ளியாக் கருதுகிறேன்.

எதுவும் பிரச்சனை இருக்காது என்று இந்திய காலாசார கமிஷன் உறுதியளித்தது அந்த நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன் இருந்தாலும் இப்படி நடந்து விட்டது. இனி இது போல ஒன்று நிச்சயாமாக நடக்காது என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் போல்  உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் உங்களில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகெங்கும் நான் ஈழத் தமிழர்களின் மேடைகளில் பாடும் போது –

‘  அம்மா   உன் பிள்ளை உயிரோடு இல்லை…

‘ எங்கள் தேசத்தில் இடி விழுந்தது…

‘ பூக்கள் வாசம் வீசும் காற்றில்’

போன்ற பாடல்களைப் பாடும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கும் ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்த அவர்களின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிற பல பாடல்களை பாடும்போது கேட்கிற மக்களும் உள்ளம் மல்க ஈழத்தின் கோர வடுக்களை தங்கி நிற்பதை நான் நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த வகையில்தன் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ்பாணம் சென்றேன் அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவை ஒட்டியே இசைக்கச்சேரி செய்யச் சென்றேன் . யாழ்பாணம் மக்களின் துயரங்களில் கலந்து கொள்ளலான் என்று எண்ணியே யாழ்பாணம் சென்றேன்.

எதிர்பாராது நடந்த இந்த தவறுக்காக மீண்டும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

மலையாள சினிமா பக்கம் ஒதுங்கிய சோனா

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை, தயாரிப்பாளர் என்று வலம் வந்த சோனா, தற்போது வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கியிருக்கிறார்.

தனது சொந்த வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாகவும், அதில் தனது இருட்டு வாழ்க்கை ரகசியங்களும் இடம்பெற போவதாகவும் கூறி, அவ்வப்போது பரபரப்பு ஏற்படுத்திய சோனாவுக்கு, எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. இதனால் மற்ற மொழிப் படங்களில் நடிக்க முயற்சித்த அவருக்கு மலையாள சினிமா கைகொடுத்திருக்கிறது. ‘கதயல்லித்து ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்தில் சோனா நடித்து வருகிறார்.

ஷகிலா போன்ற மாபெரும் கவர்ச்சி மலைகளை உருவாக்கிய மலையாள சினிமா சோனாவை சும்ம விட்டுவிடுமா? என்றால், அதுதான் இல்லை. இந்த படத்தில் சோனா, கவர்ச்சியில்லாத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதனால் தனது நடிப்பு திறமையை மற்றொரு பரிணாமத்தில் வெளிப்படுத்தும் முடிவில் தீவிரம் காட்டி வருகிறாராம்.

தனது மலையால சினிமா பிரவேசத்தைப் பற்றி கூறிய சோனா, “அனைத்து மொழிப் படங்களிலும் என்னை கவர்ச்சியாக நடிக்கவே அழைக்கிறார்கள். மலையாளப் படங்களில் மட்டுமே நல்ல வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. எனவே இனி மலையாளப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.” என்றார்.

ஏக் தா டைகர் தமிழ் ரீமேக்கில் விஜய்?

ஐந்து நாட்களில் 100 கோடியை வசூல் செய்து சாதனைப் படத்திருக்கும் சல்மான்கானின் படமான ‘ஏக் தா டைகர்’ இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு கெளதம் மேனன் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. பல காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது. அதனால் அந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட்டை ‘ஏக் தா டைகர்’ படத்தின் ரீமேக்கிற்கு விஜய் கொடுத்திருக்கிறாராம். இந்த படத்தை தமிழில் இயக்குநர் ஜெயம் ராஜா இயக்கப் போகிறாராம்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ரீமேக் படங்களை இயக்கி வெற்றி பெறும் இயக்குநர்களில் ராஜா தான் முதல் இடத்தில் இருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே விஜய்யை வைத்து’ வேலாயுதம்’என்ற ஹிட் படத்தையும் கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படத்தையும் ராஜா இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற முடிவில் விஜய் இருக்கிறாராம்.

இந்த டீலிங் ஓகேவானால் ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை விஜய் அல்லது இயக்குநர் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் ஆகிய இருவரில் ஒருவர் வாங்குவார் என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய காஸிப்.

இறகு பந்து தர வரிசை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ஷாலினி அஜித்

நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி அஜித்குமார் இறகு பந்து தர வரிசை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

நடிகர் அஜித்தை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகை ஷாலினி, திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். பிறகு தனக்கு ஆர்வமுள்ள விளையாட்டான பேட்மிட்டன் எனப்படும் இறகு பந்து  விளையாடுவதில் ஈடுபட்டு வந்தார். இதற்காக பிரத்யேக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அவரை அஜித்குமாரும் ஓக்குவித்து வருகிறார். இதனால் பல இறகு பந்து போட்டிகளில் கலந்துகொண்ட ஷாலினி அஜித் பல வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்.

ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற தரவரிசை நிர்ணயிக்கும் போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய ஷாலினி இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார். இவருடன் மகளிர் இரட்டையர் போட்டியில் ஜோடியாக களம் இறங்கியவர் பிரியா. இந்த ஜோடி சுனைரா – ஹரிணி ஜோடியுடன் இறுதி சுற்று வரை போராடி முதல் இடத்தை இழந்தது. அதேபோல கலப்பு இரட்டையர் போட்டியில் களம் இறங்கிய ஷாலினி – பிரகாஷ் ஜோடி சுனைரா – விஜய் ஜோடிக்கு எதிராக ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும்படி பரபரப்பாக விளையாடிய போதும் முதல் இடத்தை இழந்தது. இருப்பினும் தரவரிசை போட்டியில் முக்கிய இடத்தை பெற்ற ஷாலினி நாகர்கோவிலில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இறகு பந்து போட்டியில் ஷாலினி அஜித்தின் இந்த முன்னேற்றம், இறகு பந்து ரசிகர்கள் இடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீதேவிக்காக சம்பளம் வாங்க மறுத்த அஜீத்

ஸ்ரீதேவி நடிக்கும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்த அஜீத், அதற்கான சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார்.

நடிப்புக்கு முழுக்குப் போட்ட நடிகை ஸ்ரீதேவி, தற்போது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். ஆங்கிலம் தெரியாத குடும்ப தலைவி படும் அவஸ்தைகளே இப்படத்தின் கதையாகும். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தமிழ் பாகத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்க அஜீத்தை அனுகினார்கள். உடனே சம்மதம் தெரிவித்த அஜீத், நடித்தும் கொடுத்து விட்டார்.

இப்படப்பிடிப்பிற்காக மும்பையில் பிரத்யேகமான செட் அமைக்கப்பட்டது. சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற அஜீத் அங்கு சில நாட்கள் தங்கியிருந்து நடித்துகொடுத்தார்.

இதில் நடித்ததற்காக அஜீத்திற்கு கனிசமான தொகை ஒன்றை சம்பளமாக ‘இங்கீலிஷ் விங்கீலிஷ்’ தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்தார். இதை வாங்க மறுத்த விட்டார். அதுமட்டும் இன்றி அவர் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற விமான செலவு, அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தானே ஏற்றுகொண்டார்.

சால்ட் அண்ட் பெப்பர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பிரகாஷ்ராஜ்

கடந்த ஆண்டு மலையாள திரையுலகில் வசூல் சாதனைப் படைத்த சால்ட் அண்ட் பெப்பர்’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் ரீமேக் செய்யப் போகிறார்.

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படம் 140 நாட்களையும் கடந்து ஓடியதுடன் 2011ஆம் ஆண்டிற்கான பிரபலமான திரைப்படம் என்ற இரண்டு மாநில அரசு விருதுகளை பெற்றதுடன் மேலும் 22 விருதுகளையும் வென்றது.

புதிய போக்கிற்கு வித்திடும் இளைய தலைமுறை படம் என்று பாராட்டப்படும் இந்த படத்தை பிரகாஷ்ராஜ், தமிழ் மற்றும் தெலுங்கில் தனது டூயட் மூவிஸ் மூலம் தயாரிக்கிறார்.

தமிழுக்கு வரும் பிரபல கேரள தயாரிப்பு நிறுவனம்

மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கும் ‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ தமிழ் திரையுலகில் நுழைகிறது. இந்நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் தமிழ்ப் படத்தை சிம்பு தேவனின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார்.

‘லுக்சம் கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை தயாரித்து, மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களாக வலம் வரும் சதானந்தன், தேபோபோரேதே ஆகியோர் தமிழிலும் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது ‘குட்பை டிசம்பர்’ என்ற படத்தை தயாரித்து வரும் இவர்களது தயாரிப்பில் வெளியான ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படம் 140 நாட்களையும் கடந்து ஓடியது. மேலும் 2011ஆம் ஆண்டிற்கான பிரபலமான திரைப்படத்திற்கான இரண்டு மாநில அரசு விருதுகளை வென்றதோடு ஒரே ஆண்டில் மேலும் 22 விருதுகளையும் வென்றது.

சிறந்த திரைப்படம் என பாராட்டப்படும் ‘நித்ரா’ சர்வதேச படவிழாக்களில் 42 விருதுகளை வென்றுள்ளது.

வியாபர ரீதியாகவும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கும் படமும் சமூக அமைப்பு மற்றும் சாமான்ய மனிதனை பற்றிய கதையாகும். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட இந்த படம் இன்றைய உலகில் சாமான்ய மனிதன் மற்றும் சமூக அமைப்பு இடையிலான தொடர்பு பற்றியும், அதிகாரத்தில் உள்ளவர்களால் ஒவ்வோருவருடைய வாழ்க்கையும் எப்படி வேறு திசையிக்கு செல்கிறது என்பது பற்றியும் இப்படம் உணர்த்துகிறது.

இப்படத்தில் ‘கோரிபாளையத்தில்’ நடித்த ஹரீஷ், ரெய்னி சாவ்லா, தேசிய விருதுபெற்ற சலீம் குமார், அதுல் குல்கர்ணி, சரண்யா, கலாபவன் மணி உள்ளிடட்டோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் வேல்ராஜியிடம் பணியாற்றிய சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோமிருதாத், படத்தொகுப்பு விஜய்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தொடங்கி வைத்த கேமரா கண்காட்சி

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சென்னையில் புகைப்பட கேமரா கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஏற்பாடு செய்திருக்கும் இந்த கேமரா கண்காட்சியை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தொடங்கி வைத்தார்.

உலக புகைப்பட தினமான ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று சென்னை, கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த கேமரா கண்காட்சியில் 1890ஆம் ஆண்டிகளில் இருந்து பயன்படுத்திய 1020 கேமராக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் எஸ்எல்ஆர் எனப்படும் வகையான கேமராக்களாகும்.

20 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த கேமரா கண்காட்சியில் சிறுவர்கள் மற்றும் விஸ்காம் மாணவர்களிடம் கேமராவைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற தலைப்பில் கேமரா பயிற்சி வகுப்பும் எடுக்கப்படுகிறது.

இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த ஓவியர் ஸ்ரீதர் பேசுகையில், “இதுபோன்ற ஒரு கண்காட்சியை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது இன்று நடந்திருக்கிறது. இந்த கண்காட்சிக்காக கேமராக்கள் மற்றும் புகைப்படங்கள் கொடுத்து பல பேர் உதவி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. கேமரா கண்டுபிடித்த காலகட்டத்தில் பயன்படுத்திய கேமராவை இந்த கண்காட்சியில் வைப்பதற்கு மிகவும் முயன்றேன். ஆனால் அது முடியாமல் போயிற்று. அதனால் அந்த கேமராவை ஓவியமாக வரைந்து வைத்திருக்கிறேன்.” என்றார்.