ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி

உணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும் இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி, ‘பிருந்தாவனம்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்காக மீண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர்.

“பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன். தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் நாங்கள் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றோம்” என்று கூறினார் அருள்நிதி.

சுரேஷ் காமாட்சியின் இயக்கும் “மிக மிக அவசரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!

‘அமைதிப்படை பார்ட் 2’ , ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் மிக மிக அவசரம் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நாளை ஏப்ரல் 19 புதன்கிழமை

காலை பத்துமணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும்.

சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல… இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

மிக மிக அவசரம், இந்தப் படம் பெண் போலீசார் களத்தில் படும் கஷ்டங்களை மிக மிக நுணுக்கமாகச் சொல்லும் படம். படத்தின் டீசர் பார்த்த திரையுலகினர், வியந்து போய், ‘சார் உங்களிடமிருந்து இப்படியொரு உணர்வுப் பூர்மான படத்தை எதிர்ப்பார்க்கவில்லை’ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த டீசர் மற்றும் ட்ரைலரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவதற்கு முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஏப்ரல் 19-ம் தேதி ( புதன்கிழமை) வெளியாகிறது.

இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, சுரேஷ் காமாட்சியை ஒரு இயக்குநராக முறைப்படி அறிமுகப்படுத்தி வாழ்த்துகிறார் பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

“எனது இயக்கத்தில் வரும் முதல் படம் “மிக மிக அவசரம்”. அதன் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிடுவதில் மிகப் பெருமை அடைகிறேன்,” என்கிறார் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அவருடன் ஈ ராமதாஸ், முத்துராமன், ஹரீஷ், ஆண்டவன் கட்டளை அரவிந்த், லிங்கா, சக்தி சரவணன், வெற்றிக்குமரன், வீகே சுந்தர், சாமுண்டி சங்கர் (அறிமுகம்) ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

கதை வசனத்தை இயக்குநர் ஜெகன்நாத் எழுத, பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்ஸன் எடிட்டிங் செய்துள்ளார்.

திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பு இது.

4ஆம் ஆண்டு திரையரங்க தின விழா

4ஆம் ஆண்டு திரையரங்க தினம். திரையரங்கின் தலைமகன் என்று சினிமா ஜாம்பவான்களால் போற்றப்படும் திரு.சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 18ஐ .திரையரங்க தினமாக FN ENTERTAINMENT நிறுவனம் கொண்டாடுகிறது.

1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதன் சாமிக்கண்ணு வின்சென்ட்.

திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்துகொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டுசென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் எனத் தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ஆரம்பத்தில் திரையரங்குகளில் பயன்படுத்தப்பட்ட புரொஜெக்டர்களுக்கான தென்னிந்தியாவின் முதல் டீலர் இவர்தான்.

வெரைட்டி ஹால் என்ற பெயரில் முதல் திரையரங்கை கோவை மண்ணில் 1914 ஆம் ஆண்டு துவங்கி சினிமாவை வெற்றிகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டியவர் இவர்.22 வயதில் சினிமாவை நேசிக்கத் தொடங்கிய சாமிக்கண்ணு தனது இறுதி காலம் வரை சினிமாவிற்காகவே வாழ்ந்தவர்.

ஆண்டுகள் பல கடந்தாலும் இவர் தொடங்கிய வெரைட்டி ஹால் திரையரங்கம் டிலைட் என்ற பெயரில் இப்போதும் கம்பீரமாக சாமிக்கண்ணுவின் நினைவுகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது.

இவரின் பிறந்தநாளான ஏப்ரல் 18 ஐ ஆண்டுதோறும் திரையரங்கு தினமாக கொண்டாடும் விதமாக FnEntertainment சார்பாக செந்தில்நாயகம் மற்றும் ஆனந்தவரதராஜன் ஆகியோர் Village Theater உரிமையாளர் திரு. முருகானந்தம் அவரின் முழு ஆதரவுடன் இவ்வாண்டு சென்னை கமலா திரையரங்கில் காலை 8.00.மணிக்கு 2011ல்.தேசிய விருதுபெற்ற “வாகை சூடவா ” திரைப்படத்தை திரையிட்டு, 10.00 மணியளவில் வாகை சூடவா படக்குழுவினரோடு இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. இவ் விழாவை First Step PR Service சார்பாக திரு எம். பி. ஆனந்த் ஒருங்கிணைக்கிறார் எனவே இதில் தாங்கள் தங்கள் புகைப்பட மற்றும் வீடியோ குழுவினரோடு கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

‘பாம்பு சட்டை’ படத்தை தொடர்ந்து ‘திரி’ படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் அஜீஷ்

‘கோவா’ படத்தின் ‘இதுவரை இல்லாத’ என்ற பாடல் மூலம் இசை பிரியர்களின் உள்ளங்களை கவர்ந்து சென்ற பாடகர் அஜீஷ், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்ற பாம்பு சட்டை திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். இவரின் இசையில் அடுத்ததாக வெளியாக இருக்கின்ற திரைப்படம், அஸ்வின் காக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘திரி’. திரி படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகின்ற ஏப்ரல் 17 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.

“என்னை முதல் முதலாக ஒரு பாடகராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யுவன் சாருக்கு நான் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை போன்ற இசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தில் நான் பணியாற்றியது, எனக்கு கிடைத்த பாக்கியம் என்று தான் நான் சொல்லுவேன். எனக்கு எப்போதுமே வயோலின், வயோலா போன்ற இசை கருவிகள் மீது காதல் அதிகம். அந்த சாயலை ரசிகர்கள் பாம்பு சட்டை படத்தின் பிண்ணனி இசையில் உணர்ந்து இருப்பார்கள். இத்தகைய அற்புதமான வாய்ப்பை எனக்கு அளித்த என்னுடைய தயாரிப்பாளர் மனோ பாலா சாருக்கும், இயக்குநர் ஆடம் தாசனுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். பாம்பு சட்டை படத்தின் தார்மீக விமர்சனங்கள் யாவும் எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு புதுவித நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தந்திருக்கிறது.

என்னுடைய இசையில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் திரி. இந்த படத்தில் பாடல்கள் உட்பட மொத்தம் 7 இசை பதிவுகள் இருக்கின்றது. அவை யாவும் இசை பிரியர்களின் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நான் முழுவதுமாக நம்புகின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘பாம்பு சட்டை’ மற்றும் ‘திரி’ படத்தின் இசையமைப்பாளர் அஜீஷ்⁠⁠⁠⁠.

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக உருவாகி இருக்கின்றது ‘பீச்சாங்கை’

வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் ‘பீச்சாங்கை’ திரைப்படம். இந்த படத்தை ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்) ஜோமின் மேதில் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘பீச்சாங்கை’ படத்தில் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.

“அறிமுக கலைஞர்கள் திரையுலகில் வெற்றி காண்பது என்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தரமான படங்களுக்கும், திறமையான கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக எங்களின் பீச்சாங்கை படம் இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக்.

“இந்த 2017 ஆம் ஆண்டு இளம் திறமையான கலைஞர்களுக்கான ஆண்டு. அறிமுக இயக்குநர்களால் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் உள்ளங்களை கவரந்தது மட்டுமின்றி, சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் அதிகளவில் பெற்று இருக்கின்றது. நிச்சயமாக அந்த படங்களின் வரிசையில் இந்த பீச்சாங்கை படமும் இடம் பெறும். கதாநாயகனாக அறிமுகமாகும் கார்த்திக்குக்கும், இயக்குநராக அறிமுகமாகும் அஷோக்கிற்கும் இந்த பீச்சாங்கை சிறந்ததொரு திரைப்படமாக இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இரண்டு முறை தேசிய விருது பெற்ற எழுத்தாளர் தனஞ்ஜயன் கோவிந்த்.

படத்தின் வசூலை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு

விவசாயத்தை காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் ‘தப்பாட்டம்’ படக்குழுவினரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

‘நீரின்றி அமையாது உலகு.. உழவனே.. நீ இன்றியும் அமையாது உலகு..

தாய்ப்பால் துளி மட்டும் என்னை வளர்க்கவில்லை..உழவனே உன் வியர்வை துளியின்றி மனித இனத்திற்கு உணவில்லை..!

இன்று நிர்வாணமாக தெருவில் நிற்கிறாய்.. நீ மனம் துடித்து தமிழனாய் உலக அரங்கில் அவமானத்துடன் செய்வதறியாது தவிக்கிறேன்.. நான்..!

உழவனே.. இதுவரை உண்பதை மட்டுமே சிந்தித்தேன் உன்னை… சிந்திக்கவில்லை மன்னித்து விடு இனி உயிர் இருக்கும் வரை

உன் நினைவிருக்கும்..!

மே 15ம் தேதி வெளியாகும் மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தப்பாட்டம்” திரைப்படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

ஜோக்கர் படத்தின் மூலம் சாமானியருக்கு கிடைத்த தேசிய விருது!

‘ஜாஸ்மின்’ பாடலை பாடிய திரு. சுந்தர் ரய்யருடன் ஸ்வாரசிய நேர்காணல்……

ஜோக்கர் படத்தின் தயாரிப்பாளர் S.R பிரபு அவர்களுக்கும், இயக்குநர் ராஜுமுருகன் அவர்களுக்கும், பாடலாசிரியர் யுகபாரதி அவர்களுக்கும் முதலில் எனது மனம் நிறைந்த நன்றியை சமர்பிக்கிறேன். மேலும் என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இசையமைப்பாளர் சான்றோன் அவர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு ஜோக்கர் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம். இந்திய சினிமா இத்திரைப்படத்தை முக்கிய படமாக கருதி நமது தேசிய குழு விருதிற்காக பரிந்துரைத்ததற்கு மிக்க நன்றி.

என்னுடைய பாடலை சிறந்த பாடலாக அங்கீகரித்ததற்கு தேர்வு குழுவிற்கு எனது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துத்கொள்கிறேன்.

நான் பெங்களூருக்கு அண்ணன் “மணல் மகுடி” நாடககுழுவுடன் நாடகம் போடுவதற்காக ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு போன் செய்தார்கள்.

நான் திரையில் பாடிய முதற்பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை. என்னை போன்ற விவசாய குடும்பத்திலிருந்து வந்த சாமானியருக்கு தேசிய விருது கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.

நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. என்னை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளருக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துத்கொள்கிறேன்.

திரு. சுந்தர Rayar அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிய வண்ணம் தனது உரையை முடித்துக்கொண்டார்”.

ரஜினிகாந்த் தன் ரசிகர்களை சந்திக்க இருந்த நிகழ்வு ஒத்திவைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை தன் ரசிகர்களை சந்திக்க இருந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய தகவல் (குரல் பதிவில்).

என்னை வாழவைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கு நான், ரஜினிகாந்த் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அணைவருக்கும் ஒரு தகவல், பத்து ஆண்டுகள் ஆயிற்று நான் உங்களை சந்தித்து, உரையாடி, புகைப்படம் எடுத்து. ரசிகர்களாகிய நீங்களும் என்னை சந்திப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தீர்கள். நேரமின்மையின் காரணமாக அது சாத்தியமில்லாமல் போனது.

தற்போது அதற்கான சந்தர்ப்பமும்,வாய்ப்பும் கிடைத்த நிலையில் ரசிகர்களாகிய உங்களை நான் சந்திப்பதற்கு ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில், உங்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 300 என்ற வீதம் தோராயமாக 2000 பேருடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு விருந்து கொடுக்க, என்னுடைய ஆசை மற்றும் விருப்பத்தின் பெயரில் திட்டமிடப்பட்டிருந்தது. அத்தனை நபர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுப்பது என்பது ஒரு நாளில் நடைமுறையில் கடினமான விடயம் என்பதால், 8 பேர் கொண்ட குழுவாக புகைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்ககூடியதாக இருந்ததால், ரசிகர்கள் அணைவரும் தனித்தனியாக என்னுடன் புகைப்படம் எடுக்க கோரிக்கை வைத்தீர்கள். ரசிகர்களாகிய உங்களின் விருப்பத்தை ஏற்று, தற்போது நடைபெற இருந்த (ஏப்ரல் 12- 16 தேதி) சந்திப்பை ஒத்தி வைத்துள்ளோம். இனி வரும்காலத்தில், ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு மாவட்ட ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க தக்க முன்னேற்பாடு செய்யப்படும். இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கிறோம்.

என் ரசிகர்களாகிய நீங்கள் இதை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் விஜய் சேதுபதி வெளியிட்டார்

மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள். 2016 ஏப்ரல் மாதம் இப்படத்திற்க்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. இயக்குனர் P.வாசுவின் மகன் சக்தி மற்றும் நிகிஷா பட்டேல் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில். பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், M.S. பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அப்புச்சி கிராமம் படத்தில் ஹிட் குடுத்த விஷால் சந்திரசேகர் இசையமத்துள்ளார். M.S.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் மதன் கார்க்கியின் வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ‘புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு’,பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து தணிக்கை குழுவினால் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது, இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.

பிரபாஸ் உலகமேங்கும் உற்று நோக்கும் உச்ச நட்சத்திரம்

பல தெலுங்கு வெற்றி படங்களில் நடித்த பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் தனது பிரம்மாண்ட நடிப்பால் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்து உலகமே உற்று நோக்கும் உச்ச நட்சத்திரமானார்.

பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் இணை சேர்த்து அனைவரையும் கவர்ந்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. தற்போது S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகமே பெரிதும் எதிர்பார்க்கும் ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

ஒவ்வொரு நடிகருமே ஒரு படத்தை ஒரு வருடத்துக்குள்ளாவது முடித்துவிட்டு, அடுத்த படத்துக்கு சென்றுவிடுவார்கள். ஆனால், ‘பாகுபலி’ 2 பாகங்களுக்கும் சேர்த்து சுமார் 3 ஆண்டுகள் ஒதுக்கி நடித்து முடித்துள்ளார் பிரபாஸ். படத்துக்கான அவருடைய உழைப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரு நடிகர் சினிமா மீது கொண்ட காதலினாலும் தனது ரசிகர்கள் மீது கொண்ட பாசத்தினாலும் இதையும் தாண்டி எதுவும் செய்யக்கூடுமா என்று அனைவரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது பிரபாஸின் உழைப்பு.

ஒரே படத்தில் 2 உடல் தோற்றங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் பட்ட கஷ்டங்கள் குறித்து அவருடைய உடற்பயிற்சியாளர் லட்சுமண் ரெட்டி, “பாகுபலி பாத்திரத்துக்காக கட்டுமஸ்தான உடலும், மகன் சிவடு பாத்திரத்துக்காக சற்று இளைத்தும் தெரியவேண்டும் என்று உழைத்தார். 4 வருடங்களாக அவருடைய உடலமைப்பை மாற்றிக் கொண்டே இருந்தார். அது மிகவும் கடினம்” என்று தெரிவித்தார்.

மேலும், ‘பாகுபலி’ படத்துக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வெற்றி பிரபாஸ் மீதான ஈர்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளதை பாலிவுட் திரையுலகம் உணர்ந்துள்ளது. பல்வேறு இயக்குநர்கள் அவரை இந்தி படத்தில் நடிக்க வைக்க அணுகிவருகிறார்கள். ஆனால், தெலுங்கில் 2 படங்கள் முடித்துவிட்டு நல்ல கதைகள் வந்தால் இந்தி திரையுலகிற்கும் தனது சிறகை விரிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.

பிராபஸின் வியாபாரம் இந்தி திரையுலகின் கான் நடிகர்களுடைய வியாபாரத்தை மிஞ்சியிருப்பதாக ‘பாகுபலி’ ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “பிரபாஸ் தான் இந்திய திரையுலகின் பெரிய நடிகராக பிரபாஸ் வளர்ந்துவிட்டார். அவருடைய படம் அநேகமாக முதன்முதலில் 1000 கோடியை தாண்டும் படமாக இருக்கும். அவரோடு சேர்ந்து பணியாற்றியிருப்பதில் மகிழ்ச்சி. அவ்வளவு எளிமையான மனிதர் அவர்.” என்று கூறியுள்ளார்.