ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த சிறுமி A.P. நேத்திராவை இளைய தளபதி விஜய் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டினார்

தழிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷன் கீழ் இயங்கும் சேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியஷனில் உள்ள Josh Queen Club -ல் பயிலும் மாணவி அம்மாப்பேட்டையை சேர்ந்த A.P. நேத்திரா(Honey Kids Pre K.G.) 2016-2017 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட மாநில தேசிய அளவில் வெற்றி பெற்று கடந்த பிப்ரவரி மாதம் 3லிருந்து 5ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தக்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இத்தேர்ச்சி மூலம்”ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017″ மே மாதம் தாய்லாந்தில் நடைபெற உள்ள போட்டியில் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றறை வயதுள்ள மாணவி A.P. நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை இளையதளபதி விஜய் அவர்களிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர்.

இதை அறிந்த இளையதளபதி விஜய் அவர்கள் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோஷியேஷன் உறுப்பினர்களையும், Josh Queen Club உறுப்பினர்களையும், மாணவியர், பெற்றோர்களையும், நேத்திராவையும் நேரில் அழைத்து மனமார்ந்து பாராட்டி, ஊக்குவித்தார். இச்சந்திப்பின்போது இளையதளபதி விஜய் அவர்களுடன் தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியேஷனின் பொதுச்செயலாளர் S.முருகானந்தம், பொருளாளர் மு.கௌதம், சேலம் மாவட்டம் பொதுச்செயலாளரும் Josh Queen Club -ன் உரிமையாளரும் பயிற்சியாளருமான K.ராஜேஷ்குமார், A.மேகலா அகியோர்களும் கலந்து கொண்டனர்.

இசைஞானி இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் உருவாகி இருக்கின்றது ‘களத்தூர் கிராமம்’

ஒரு திரைப்படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பது இசை தான் என்பதை ஒவ்வொரு இளையராஜாவின் படங்கள் மூலமாக அனைவரும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கும் திரைப்படம், இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் ‘களத்தூர் கிராமம்’. இந்த படத்தை ‘ஏ ஆர் மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்து இருக்கிறார்.

இயக்குநர் சரண் கே அத்வைத்தன் இயக்கி இருக்கும் இந்த களத்தூர் கிராமம் திரைப்படத்தில் கிஷோர் குமார் மற்றும் யக்னா ஷெட்டி (அறிமுகம்) முன்னணி கதாபாத்திரங்களிலும், சுலீல் குமார், மிதுன் குமார், ரஜினி மகாதேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பாளர் சுரேஷ் உர்ஸ், பாடலாசிரியர்கள் இசைஞானி இளையராஜா – கண்மணி சுப்பு, ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மகேஷ் மற்றும் ஓம் பிரகாஷ் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

“ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்தாலே, நம் உள்ளங்களில் ராஜா சாரின் பாடல்கள் தானாக ஒலிக்க ஆரம்பித்து விடும். அப்படி தான், இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த அடுத்த கணமே, ராஜா சாரின் இசை தான் எங்கள் கதைக்கு மிக சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா சார் எங்கள் படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்தார். படத்தின் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்களை களத்தூர் கிராமம் படத்திற்காக உருவாக்கி இருக்கிறார் ராஜா சார். படத்தொகுப்பிற்கு முக்கியத்துவம் தருகின்ற கதையம்சத்தை கொண்டது எங்கள் களத்தூர் கிராமம் திரைப்படம். அந்த வகையில், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் எங்களுக்கு அளித்து, அற்புதமான படத்தொகுப்பை ஆற்றி இருக்கும் எங்கள் படத்தொகுப்பாளர் சுரேஷ் உர்ஸ் சார் அவர்களுக்கு, எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

போலீசாருக்கும், களத்தூர் கிராம மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனை தான் எங்கள் படத்தின் கதை கரு. படத்தின் கதாநாயகன் கிஷோர், இளைஞர் வேடம் மற்றும் முதியவர் வேடம் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980 ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் எங்கள் ‘களத்தூர் கிராமம்’ திரைப்படம் நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் சரண் கே அத்வைத்தன்.

புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்கும் எடிட்டர் டான் போஸ்கோ

ஒரு சிறந்த எடிட்டரால் தரமான படத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை சினிமா உலகில் உள்ளது. மேலும் ஒரு படத்தின் இயக்குனருக்கு வலது கையே அப்படத்தின் எடிட்டர் தான். அப்படி புது யுக்தியுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறார் எடிட்டர் டான் போஸ்கோ.

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் எடிட்டராக அறிமுகமானவர் டான் போஸ்கோ. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக இப்படத்தின் எடிட்டிங், சினிமா துறையினரால் அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். இன்னும் இவரது எடிட்டிங்கில் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’, உள்ளிட்ட பல படங்கள் வெளியாக தயாராக இருக்கும் நிலையில், தற்போது இவர் புதிய படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார்.
இவர் இயக்கவிருக்கும் புதிய படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. எடிட்டராக பலரின் கவனத்தை ஈர்த்த டான் போஸ்கோ, தற்போது இயக்குனராக மேலும் பலரின் கவனத்தையும் ஈர்க்க இருக்கிறார். விரைவில் இப்படம் பற்றிய முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கின்றனர்.

இதுகுறித்து டான் போஸ்கோ கூறும்போது, ‘நான் முதலில் ‘உதவி’ என்ற குறும்படத்தை இயக்கினேன். அதுதான் எனக்கு சிறந்த புத்துணர்ச்சியை கொடுத்தது. யாரிடமும் உதவி எடிட்டராக பணியாற்றாமல் எடிட்டிங் கற்றுக் கொண்டு சினிமா உலகில் அடியெடுத்து வைத்தேன். எனக்கு எடிட்டர் என்ற அடையாளம் கொடுத்தது ‘சுந்தரபாண்டியன்’ படம். முதல் படமே பெயர் சொல்லும் அளவிற்கு அமைந்தது சந்தோஷம். ஆனால், பல படங்களுக்கு எடிட்டிங் செய்து வந்ததால் படம் இயக்க முடியவில்லை. அதுபோல், யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல், தற்போது முழுவீச்சில் படம் இயக்கும் எண்ணத்தில் களம் இறங்கி இருக்கிறேன். இந்த புதிய படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற அடையாளம் கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

நடிகர் ஆரி கலந்து கொண்ட மாறுவோம்! மாற்றுவோம்! விழிப்புணர்வு அறப்போராட்டம்!

நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து “அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்” திரைப்பட நடிகர் ஆரியின் தலைமையில் மாணவர்களின் விழிப்புணர்வு அறப்போராட்டம் (15.3.17) மத்தியம் 2 மணி அளவில் அண்ணா சாலை உள்ள அணணா தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. பெரிய அளவில் வெற்றி பெற்ற இப்போரட்டத்தினை தொடர்ந்து இப்போது தமிழ் மாநிலம் தாண்டி கேரளாவில் நடிகர் ஆரி தலைமையில் வரும் மார்ச் 25ம் தேதி எர்ணாகுலத்தில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

தலைமை தபால் நிலையம்
மருத்துவமனை சாலை
மரைன் டிரைவ்
எர்ணாகுளத்தில் காலை 10 மணி அளவில் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் கல்ந்துகொள்ள நடிகர் ஆரி தலைமையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயக்கடனை ரத்து செய்யும் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

சாமானியர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாய் மாறிவிட்டது இந்தியாவில் உள்ள வங்கிகள்.

குறிப்பாக வங்கிக்கணக்கில குறைந்தபட்சம் ரூபாய்.5000 வைப்புத்தொகை வைத்திறுக்க
வேண்டும், நகரத்தில்இருப்பவரகள் ரூபா.3000 வைப்புத்தொகை வைத்திறுக்க வேண்டும், அதேசமயம் கிராமத்தில் இருப்பவர்கள் ரூபா.1000 வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக ஏ.டி.எம் மிஷினில் பணம் வைப்பு செய்தாலும் ,எடுத்தாலும் வங்கிக்கணக்கின் இருப்பில் பணம் இல்லாவிட்டாலும் பணத்தை பிடித்தம் செய்வோம் என்று வங்கிகள் அறிவித்துள்ள அதிரடிச் சட்டத்தினால் சாமானிய மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்.

இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா?
இதை நாம் தீர்க்கவும் வேண்டாமா?
50000 விவசாயக் கடன் வாங்கிய விவசாயியை அடியாட்கள் வைத்து கடன் வசூலிக்கும் வங்கிகள்தான் ரூபா.9000 கோடிகளை அள்ளிச்சென்ற மல்லையாவை தப்பிச்செல்ல வழிவகுத்துக்கொடுத்தது வங்கிகள் மாதம் ரூபா.5000 தவிக்கின்ற சாமானியர்களின் தலையில் இத்தகையை சுமையை சுமத்துவது எந்தவகையில் நியாயம்?

இந்த தார்மீக கேள்வியை நிலைநிறுத்தி ,வெறும் ரூபா.50 இல் இந்தியன் அஞ்சல் வங்கியில் கணக்கைத் தொடங்கி ஏ.டி.எம். இல் கட்டணம் ஏதுமின்றி பணம் பெற்றுக்கொள்வதுடன், அபராதம் இன்றி பணப்பரிமாற்றம் செய்ய பரிந்துரைத்தும் கடந்த (15.3.17) மத்தியம் 2 மணி அளவில் அண்ணா சாலை உள்ள அணணா தலைமை தபால் நிலையத்தில் விழிப்புணர்வு அறப்போராட்டம் நடைபெற்றது.

இப்போரட்டத்தின் வெற்றி நாடு முழுதும் பரவியது. இதனைத்தொடர்ந்து இப்போது கேரளா மாநிலம் எர்ணாவூரில் ஆரி தலைமையில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

அஞ்சலக கணக்கில் ஒரு நாளைக்கு ரூபாய்.40000 வரையில் பணத்தினை எடுக்கலாம்.அதேவேளை ஒரு நாளைக்கு ஒரே நேரத்தில் 10 பேர்களுக்கு தலா ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் வரை அனுப்பலாம்.அத்தோடு ஏப்பிரல் மாதம் முதல் ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவையும் தொடங்கவுள்ளது.மேலும் 500 ரூபாய் இருப்பு இருந்தால் காசோலை பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சலக கணக்கிலிருக்கும் இத்தனை வசதிகளை இந்தியாவிலிருக்கும் அத்தனை சாமானியர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகர் ஆரி உடன் இனைந்து மாணவர்கள் இந்திய அஞ்சல் வங்கிக் கணக்கை தொடக்கிவைக்கின்றார்கள்.

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் இத்திட்டத்தால் பயன்பெற வேண்டும். இத்திட்டத்தினை பற்றிய விழிப்புணர்வுக்கு குரல் கொடுத்த முதல் இந்தியன், தமிழன் ஆரி. ஆரியின் வேண்டுகோளில் நடிகர் சங்கத் தலைவர் நாசர். நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதிட்டத்தில் இணைந்து இந்தியர் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்கிறார் ஆரி.

மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் அவர்களது கடனை ரத்து செய்யக் கோரி வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடை பெறவிருக்கிறது.

நாளை முதல் இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அஞ்சல் வங்கிக் கணக்குனை தொடங்குமாறு வலியுறுத்தி ஒட்டு மொத்த சாமானிய மக்களின் நலனுக்காக நாம் நடத்தும் அறவழி விழிப்புணர்வு போராட்டம்……………..

“அஞ்சல் வங்கிக் கணக்கிற்கு மாறுவோம்;வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்”​

தம்பி நாவை அடக்கு: விஷாலுக்கு கலைப்புலி எஸ்.தாணு எச்சரிக்கை!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்தேர்தலில் முன்னேற்ற அணியின் செய்தியாளர் சந்திப்பு பிரசாத்லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது.

அதன் சங்கமமாக இந்த விழா அமைந்தது.

இவ்விழாவில் முதலில் வரவேற்றுப் பேசிய கௌரவச் செயலாளருக்குப் போட்டியிடும் கே.சதீஸ்குமார் (ஜேஎஸ்கே) பேசும்போது ”தயாரிப்பாளர்கள் ஒன்றேகுலம் என்று இருப்பவர்கள்.நாங்கள்ஒரே குடும்பம்.

இங்கே 1000 கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் விஷமிகள் ஊடுருவ விடமாட்டோம் .

இந்த அணிக்கு ஆதரவாக எஸ்.தாணுஅவர்களும் டி.சிவா அவர்களும் தோள் கொடுப்பது இதன் ஒற்றுமைக்குச் சாட்சி. எங்களை வழிநடத்தும் ஜே.கே. ரீத்தீஷ், சேரன் அவர்களுக்கு நன்றி.

தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்க மாகவே இருக்க வேண்டும். இதில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. நடிகர் சங்க வாக்குறுதிகளையே அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களைப்போல நாங்கள் தரமற்ற விமர்சனம் செய்ய மாட்டோம். செயலில் காட்டுவோம்.” என்றார்.

தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது ” இந்த முன்னேற்ற அணியினர் வெறும் வாய்ச் சொல் வீரர்கள் அல்ல. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று விரிவாகப் பேசுவதில் விருப்பமில்லை. செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள். எங்கள் அணி சார்பில் முதல்கட்ட செயல்பாடுகளாக 10 முக்கிய வாக்குறுதிகளும் 10 நலத்திட்டங்களும் இப்போது அறிவித்திருக்கிறோம்.” என்றார்.

டி சிவா

தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது” கடந்த காலத்தில் சங்கம் எதுவுமே செய்யவில்லை என்பது மிகவும் தவறு.கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் இரண்டைத் தவிர எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டோம். பல சிறு முதலீட்டுப் படங்கள் வெளிவர உதவியிருக்கிறோம் . சிறு முதலீட்டுப் படங்கள்125 படங்களில் 54 படங்களை சாட்டிலைட் உரிமைக்கு விற்றிருக்கிறோம். சேனல்கள் எப்.எம்..விளம்பரக் கட்டணங்களை 2500 என்பதை 900 என்றும்500 என்றும் குறைத்திருக்கிறோம்.

திருட்டு விசிடி பற்றி விஷால் இவ்வளவு பேசுகிறார். எங்கள் சங்கத்தில் அவருக்கே பொறுப்பு கொடுத்துத் திருட்டு விசிடியைக் கவனிக்கச் சொன்னோம். ஆனால் அவர் பொறுப்பேற்கவில்லை. எதுவுமே கண்டு கொள்ள வில்லை. அவரால் தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்ய முடியாது.

விஷாலிடம் தயாரிப்பாளர் சங்கத்தில் அலுவலக நிர்வாகத்தினர் தொழில் முறை தயாரிப்பாளர்களாக இருக்க வேண்டும் என்றோம். கேட்க வில்லை. அவர்கள் தினமும் ஓட்டல், பார்ட்டி, பணம் கவர், தங்கம் என்று தயாரிப்பளர்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் எப்படி நேர்மை இருக்கும்?

ஆயிரம் உண்டு இங்கு ஜாதி, அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி? தவறானவர்களை உள்ளே விட மாட்டோம். தயாரிப்பாளர்களின் வலி நடிகர்களுக்குத் தெரியாது. இந்த அணி வெற்றி பெறுவது உறுதி.” என்றார்.

ஜேகே ரித்தீஷ்

முன்னாள் எம்.பி நடிகர் ஜே.கே.ரித்தீஷ் பேசும் போது

” இப்போது எடுக்கிற 100 படங்களில் 95 படங்கள் ஓடுவதில்லை. தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் வெற்றி பெற்றால் நடிகர் முதல் லைட்மேன் வரை பங்கு போடுவார்கள். தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர் மட்டுமே தாங்க வேண்டும்.

நடிகர் சங்கத்தில் பாலமுருகன் என்கிற தன் பிஏவை வைத்து நடிகர் சங்கத்தை விஷால் நிர்வாகம் செய்கிறார். தகுதி இல்லாத அவர் தவறு செய்கிறார். 100 பேரை சங்கத்திலிருந்து நீக்கியுள்ளார்கள். அப்படி ஒரு நிலை இங்கே வந்து விடக்கூடாது என்றுதான் இவர்களை நான் ஆதரிக்கிறேன்.” என்றார்.

கலைப்புலி எஸ் தாணு

கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, ” இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்றுதான் நான் இங்கு வந்தேன்.

தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.

தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார் 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம் ‘ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.

‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா?
ஒரு முறை 50 லட்சரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.

சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் “மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.

நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சிதளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.

ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா?

பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?

இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ” இவ்வாறு தாணு பேசினார்.

நிறைவாக தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

விறுவிறு வில்லன் நடிகர் மதுசூதன்!

அண்மையில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ள படம் ‘மாநகரம்’.

வில்லன் பாத்திரமாக இருந்தாலும் இப்படத்தின் கதை மையம் கொள்ளும் பாத்திரமாக இருப்பது பிகேபி என்கிற பயங்கர மான அந்தத் தாதா பாத்திரம் தான்.

அப்பாத்திரத்தில் நடித்துள்ள மதுசூதன் , பார்ப்பவர்களை மிரள வைத்தாலும் பக்கம் பக்கமாக பஞ்ச் வசனம் பேசவில்லை. அடித்து துவைத்து ஆவேசம் காட்டவில்லை. பெரும்பாலும் அமர்ந்தபடியே இருந்தே தன் உடல் மொழியால் அப்பாத்திரத்தின் அடர்த்தியைக் காட்டியிருக்கிறார். பாராட்டுகளை அள்ளி வருகிறார்.

தான் நடிக்கும் படங்களில் இப்படித் தன் கரடு முரடு தோற்றத்தாலும் அளவானஅடக்கமான உடல் மொழியாலும் அசத்தி, இன்று விறுவிறுப்பான வில்லன் நடிகராக வளர்ந்து வருகிறார் இந்த மதுசூதன்.

விஜய் மில்டன் இயக்கிய

‘கோலி சோடா’வில் நாயுடுவாக அழுத்தமாகப் பதிந்து அலறவைத்தவர், அதற்கு முன் 10 படங்களில் நடித்து இருக்கிறார். ஆனாலும் வெளியே தெரியாமல் புகழ் மறைவுப் பிரதேசத்திலேயே இரு ந்திருக்கிறார்.

‘கோலி சோடா’வுக்குப் பிறகு ‘ஜீவா’ , ‘வன்மம்’ , ‘மாஸ் ‘ ,’தனி ஒருவன் ‘,’இது நம்மஆளு’, ‘கதகளி’, ‘காஷ் மோரா’,’.குற்றமே தண்டனை’ ‘எனத் தமிழில் பலதரப்பட்ட கதாநாயகர்களுடன் விறைப்பும் முறைப்பும் காட்டியவர் , பிறகு மலையாளம்’ தெலுங்கு’ கன்னடத்தையும் விட்டு் வைக்க வில்லை. தெலுங்கில் ‘கிக் 2’, ‘பாகு பலி 2’ , நாக சைதன்யாவின் புதிய படம் , மலையாளத்தில் ஆதம் பிருத்திவிராஜ் படம் , தமிழில் விக்ரம் பிரபுவுடன் ‘நெருப்புடா’. கிருஷ்ணாவுடன் ‘பண்டிகை’ , விஷால் , சந்தானம் நடிக்கும் வெவ் வேறு புதிய படங்கள் என வரிசை கட்டி நிற்கின்றன படங்கள். கன்னடத்தில் நடித்து முடித்து 3 படங்கள் வெளிவரவுள்ளன.

மும்மொழி நடிகராக வலம் வரும் மதுசூதன் திடீரென இந்த நிலையை எட்டிவிட முடியவில்லை. பெரிய பெரிய படங்களில் கூட ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் தான் நடித்திருந்தார். தன் போக்கு பாதை பயணம் பற்றிக் கூறும்போது

“எனக்குப் பிடித்தது சினிமா. ஆரம்பத்தில் எனக்குக் கனவுகள் இருந்தன. பலதரப்பட்ட வெவ்வேறான அனுபவங்களுக்குப் பிறகு நம்மிடம் எதுவுமில்லை நம்மால் எதுவுமில்லை .காலம் அழைத்துச் செல்லும் பாதையில் பயணம் செய்வது என்கிற தெளிவு வந்து விட்டது. அப்படியே செய்து வருகிறேன். ”

தத்துவமாகப் பேசிவிட்டு அப்பாவி போலச் சிரிக்கிறார்.

உதவி இயக்குநர் உருவாக்கியுள்ள இசை ஆல்பம்!

சினிமாவுக்கான முன்னோட்டம் போல ஒரு பாடல் ஆல்பம்! சிம்பு படத்தின் பாடல் தலைப்பில் உருவாகியுள்ள ஆல்பம்!

கால மாற்றத்தின் தாக்கம் எல்லாத் துறைகளிலும் காணப்படுகிறது. இதற்குச் சினிமா மட்டும் விதிவிலக்கல்ல. முன்பெல்லாம் படம் இயக்க வாய்ப்பு தேடுபவர்கள் பிரபல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருந்தால் எளிதில் வாய்ப்பு கிடைக்கும். பின்னர் கதை கவிதை எழுதியதை ஒரு தகுதியாகக் கருதினார்கள். திரைப்படக் கல்லூரியில் படித்தது தகுதியாகக் கொண்டது ஒரு காலம்.

இப்போது வாய்ப்பு தேடும் இளைஞர்கள் சினிமாவில் தன்னை விளக்கிச் சொல்ல ,பிறர் விளங்கிக் கொள்ள குறும்படம் இயக்குவது, ஆல்பம் உருவாக்குவது என்பவை புதிய போக்காக மாறியுள்ளன.

இவ்வகையில் தனது ‘பயோடேட்டா’ போல பாடல் ஆல்பம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் ஓர் உதவி இயக்குநர். அவர் பெயர் விஜயமாறன். செந்தில்நாதன் என்கிற இயக்குநரிடம் சினிமா அனுபவம் கற்ற அவர், தன்னை வெளிப்படுத்த ‘ஏனோ வானிலை மாறியதே ‘ என்கிற ஒற்றைப்பாடல் ஆல்பத்தை இயக்கியுள்ளார். கெளதம் மேனன் இயக்கி சிம்பு நடித்து ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பாடலின் பல்லவி தான் ‘ ஏனோ வானிலை மாறியதே’ என்கிற தலைப்பு. ஸ்கிரிப்ட் பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு ஸ்ரீராம் ராகவன். இவர் சந்தோஷ் சிவனின் உதவியாளர் .இசை பிரஷாந்த் ஆர். விஹாரி. இவர் ஏ ஆர். ரகுமான் இசைப் பள்ளியின் மாணவர். படத் தொகுப்பு ஆனந்த் ஜெரால்டின். இவர் பிரபல படத்தொகுப்பாளர் கே.எல். பிரவீனின் உதவியாளர்.

பல்துறை திறமைசாலி இளைஞர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் போல இந்த ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் விஜய மாறன். தன் ஆல்பம் பற்றி அவர் பேசும் போது .

“இது ஒரு திரைப்பட வாய்ப்பு தேடுதலுக்கான முன்னெடுப்பு முயற்சி தான். என் படத்தின் கதைக்கான சூழலின் படி இப்பாடல் உருவாகியுள்ளது. தனியே இந்தப் பாடலை பார்த்தாலும் கேட்டாலும் எல்லாருக்கும் பிடிக்கும். திரைப்பட உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில் நுட்பங்கள் இந்த ஒரு பாடலில் பயன்படுத்தப்பட் டுள்ளன. திரைப்படத்துக்கான தரத்தில் உருவாகியுள்ளது. உதய் , காவ்யா, சுப்ரமணி்யம் நடித்துள்ளனர்.

இவர்களில் நடிகை காவ்யா ‘ராமாயணம்’ இந்தித் தொலைக்காட்சி தொடரில் மாந்தவியாக நடித்திருப்பவர். பாடலை சினிமா பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். நரேஷ் ஐயர் பாடியுள்ளார்.

அம்மா இல்லாத வீடு. கண்டிப்பான அப்பாவின் அரவணைப்பில் வளரும் நாயகி.தன் காதலனை ஒரு நண்பனாக தன் தந்தையிடம் அறிமுகம் செய்து வைக்கிறாள். மெல்ல மெல்ல பழகி அவளது கண்டிப்பான அப்பாவின் உள்ளத்திலும் அவர்கள் இல்லத்திலும் இடம் பிடிக்கும் அவன் இம்முயற்சியில் எப்படி வெற்றி பெறுகிறான் என்கிற கதைச் சூழலில் உருவானதே இப்பாடல் “என்கிறார் விஜயமாறன்.

‘கட்டப்பாவ காணோம்’  எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

‘கட்டப்பாவ காணோம்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் நான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படத்தில் நடித்து இருக்கின்றேன். மேலும் இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான, அதே சமயத்தில் தனித்துவமான ஒரு காட்சி இருக்கின்றது. எங்கள் காதலை பற்றி நான் கதாநாயகனின் (சிபிராஜ்) தந்தையிடம் சொல்ல போகும் போது, நிலைமை முழுவதுமாக மாறி விடுகின்றது. நிச்சயமாக இந்த காட்சி ரசிகர்கள் அனைவரையும் கவரும்” என்று உற்சாகமாக கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஜோதிகா ரசிச்சு கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கதை தான் “மகளிர் மட்டும்“ இயக்குநர் பிரம்மா!

ஜோதிகா மேடம் சீரியசாக , ரசிச்சு , சிரிச்சு கேட்டு நடிக்க ஒப்புக்கொண்ட கதை தான் “ மகளிர் மட்டும் “ இயக்குநர் பிரம்மா !!!

‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.

‘மகளிர் மட்டும்’ கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார்.

ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க.

முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி பயிற்சிப் பட்டறை வைக்கறது அவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுக்கு இல்ல. இது ஆக்டிங் ப்ராக்டீஸ் கிடையாது. கேரக்டரோட ஆழத்தை உணர்ந்து உள்வாங்கிக்கிற முயற்சியாகத்தான் இந்த ஒர்க்‌ஷாப். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா எல்லாருமே பிஸியானவங்க. அதனால அவங்களத் தவிர மத்தவங்க பயிற்சி எடுத்தாங்க. ஊர்வசியும், நாசரும் ஏற்கனவே பழைய ‘மகளிர் மட்டும்’ல நடிச்சிருந்தவங்க. மறுபடியும் அதே டைட்டில்ல நடிச்சிருக்கறது சந்தோஷமா இருக்குதுனு சொன்னாங்க.

பானு ப்ரியா மேம்மை நடிக்க வைக்கலாம்னு தேடினா வெளிநாடு போயிருந்தாங்க. அவங்க வர்ற வரை காத்திருந்தோம். அதே மாதிரி ஊர்வசி மேம் ஒரு தகவல் களஞ்சியம். அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க. ஆக்ரா ரோட்டுல ஜோதிகா புல்லட் ஓட்டுற சீன்ல பைக்ல பின்னாடி உட்காரச் சொன்னதும் ஊர்வசி மேம் மிரண்டுட்டாங்க. ‘எனக்கும் பைக்குக்கும் ராசியே கிடையாது’னு தயங்கினாங்க. யாருக்கும் தெரியாமல் கேமரா வச்சு, லைவ் ஷூட் பண்ணினோம். செட்டுல சரண்யா மேம்ல இருந்து எல்லாருமே ஒண்ணு சேர்ந்தா பிக்னிக் மாதிரி பேசி, சிரிச்சு, சந்தோஷமாக இருந்தோம். படத்தோட பூஜை அன்னிக்கு சூர்யா சாரால் வர முடியல. முதல் நாள் ஷூட்டிங் அன்னிக்கு ‘அழகான படத்தை எடுத்துக் கொடுங்க. வாழ்த்துகள்’னு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதன்பிறகு நிறைய முறை ஸ்பாட்டுக்கு வருவார். ‘எந்த ஆர்ட்டிஸ்ட் தேவைனாலும் சொல்லுங்க’னு கேட்பார். ஒரே ஒரு படம் பண்ணின இயக்குநர்னு நினைக்காம எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

என்னோட குறும்படங்கள்ல இருந்து கூடவே இருக்கும் எஸ்.மணிகண்டன், ‘குற்றம் கடிதலு’க்கு அடுத்து இதற்கும் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். இடையே தெலுங்கில் ரெண்டு படங்கள் அவர் பண்ணிட்டார். படத்துக்கு இசை ஜிப்ரான். ‘வாகை சூடவா’ல இருந்து அவரோட இசையை கவனிச்சிட்டிருக்கேன். இதுல அவர் நாலு பாடல்கள், ஒரு தீம் மியூசிக், ஒரு ஃபோக்னு வெரைட்டி கொடுத்திருக்கார்.

பிரபாவதி. ஆவணப்பட இயக்குநரா நடிச்சிருக்காங்க. வழக்கமான ஜோதிகா – ல இருந்து கொஞ்சம் மாறியிருக்கற ஜோதிகாவா இருக்கணும். ரெகுலர் ஆடியன்ஸ் விரும்பற ஜோதிகாவாகவும் தெரியணும்னு இந்த கேரக்டரை உருவாக்கினேன். புல்லட் தவிர, வேற ஒரு வாகனமும் அவங்க ட்ரைவ் பண்ணுவாங்க. நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு வந்தாங்க.

அவங்க பஞ்சாபி பெண். ஆனா, தமிழை உணர்ந்து பேசி நடிக்கறாங்க. தங்லீஷ்லதான் ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தேன். டயலாக்கைக் கூட முதல்நாளே வாங்கிட்டுபோய் மறுநாள் வரும்போது மனப்பாடமா பேசினாங்க. ‘மாயாவி’ல சொந்தக்குரல்ல டப்பிங் பேசியிருப்பாங்க. அதுக்குப் பிறகு இதுலதான் அவங்களே டப்பிங் பேசியிருக்காங்க. காலையில ஆறு மணிக்கு ஷூட்டிங்னா ஷார்ப்பா அந்த டைமுக்கு செட்ல இருப்பாங்க. டெடிகேட்டட் ஆர்ட்டிஸ்ட்.

குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை!

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் “நாரோ மீடியா” என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்பட​த்​ திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் திரையிட்டுக் காண்பித்திருக்கிறார்கள். ​ நிசப்தம் படம் பார்த்த குழந்தைகளும் பெற்றோரும் கண்ணீருடன் வெளியே வந்தனர். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் சொல்லத் தயங்கும் பல நல்ல கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்விற்கு ஏற்பாடு செய்திருந்த ​​மனிதம் ஃபவுண்டேசனுக்கு நன்றி தெரிவித்தனர்​.

இதன் நோக்கம் பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான விழிப்புணர்வு பெற வைப்பதாகும். படம் பார்த்த பின்னர் குழந்தைகள், மனிதம் ஃபவுண்டேசன் அறக்கட்டளையின் லோகோவை அறிமுகப்படுத்தினர். அப்போது, நாரோ மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு நாசர், முதன்மை செயல் இயக்குநர் செல்வி பிரபாலா சுபாஷ் ஆகியோரும், பேபி ​​சைதன்யா, நடிகர் அஜய், இயக்குநர் மைக்கேல் அருண், தயாரிப்பாளர் ஏஞ்சலின் டாவின்சி உள்ளிட்ட நிசப்தம் படக்குழுவினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதற்கான ஒருங்கிணைப்பினை மக்கள் தொடர்பாளர்களான திரு ஜான் மற்றும் திரு யுவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.