சின்னமலை-விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை நாளை துவக்கம்

சின்னமலை – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் துவங்குகிறது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியின் முதல் கட்டமாக கோயம்பேடு – ஆலந்தூர் வரையிலான சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து சின்னமலை – விமான நிலையம் மற்றும் செனாய் நகர் – கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதில் சின்னமலை – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார்.

இதையடுத்து சின்னமலை – விமான நிலையம் இடையே நாளை (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச் செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலும் நாளை காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை – விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைப்பார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.

நாளை ரயில் சேவை தொடங்கும் சின்னமலை – விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ-க்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீ-க்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீ.-க்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீ.-க்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீ.-க்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீ-க்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விமான நிலையத்தில் சின்னமலை வரை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும். விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கட்டணக் குறைப்பு பற்றி இதுவரையில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மெட்ரோ ரயில் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலை யம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். தற்போது கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி பயணிகள் எண்ணிக்கை தினமும் 15 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.