எண்ணெய் படலத்தை அகற்றும் பணிகளைப் பார்வையிட்ட முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

கடற்கரையில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.

சென்னையில் அண்மையில் விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து கரை ஒதுங்கிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் 5,700 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எர்ணாவூருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்து, அகற்றும் பணியை ஆய்வு செய்தார்.

அப்போது முதல்வரிடம், “மெரீனா, எலியட்ஸ் கடற்கரைகள் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு விட்டது. மீதமுள்ள கடற்கரைப் பகுதிகள் இன்னும் ஓரிரண்டு நாள்களில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும்’ என்றனர்.

இதையடுத்து, அதிகாரிகளுக்கு முதல்வர் கூறியதாவது:-

எர்ணாவூர் பகுதியிலுள்ள கடலோர தடுப்புச் சுவர் பாறைகளில் படிந்துள்ள எண்ணெய் படலத்தைத் தூய்மைப்படுத்தும் பணியையும் விரைவில் முடித்திட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மீன் மாதிரிகளை தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதென விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற வழிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, அமைச்சர்கள் டி.ஜெயகுமார், கே.சி.கருப்பண்ணன், பா.பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கடலோரக் காவல்படைகமாண்டர் ராஜன் பர்கோத்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.