ஜல்லிக்கட்டு: காவல் துறையினருடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள், உலக அளவில் பிரபலமாகி வருகிறது.

தமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் பரவியுள்ள இப்போராட்டம் வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்று வரும் நிலையில், இன்று கல்லூரிகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருவதால், போராட்டத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நேற்று இரவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய தமிழக அமைச்சர்கள், அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்ட அமைப்பை தடை செய்வது குறித்தும் அறிக்கை வெளியிடுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போலீஸ் டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷ்னர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் போராட்டத்தை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த ஆலோசனையின் போது முதல்வர் பன்னீர்செல்வம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.