முதலமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார்: வித்யாசாகர் ராவ்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இன்று அப்பல்லோ மருத்துவமனை சென்று முதலமைச்சரின் நலம் விசாரித்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எய்ம்ஸ் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே சிகிச்சை அளித்தனர். தற்போது, சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரடியாக சென்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நலம் விசாரித்தார். சுமார் 25 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ஆளுநர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவிடம் என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை கேட்டு அறிந்தார்.

பின்னர் வெளியிட்ட அறிக்கையில், ”முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்கு நல்ல உயர்தர சிகிச்சை அளித்து வரும் மருத்துவக் குழுவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். முதலமைச்சர் இருக்கும் வார்டுக்கே சென்று நான் அவரைப் பார்த்தேன். அவர் நன்றாக பேசி வருகிறார். மருத்துவர்கள் நல்ல சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் நேற்று அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனையும், முதலமைச்சரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு இருதயம், நுரையீரல் தொடர்பான சிகிச்சைகளும், பிசியோதெரபியும் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நன்றாக பேசி வருவதாகவும் தெரிவித்து இருந்தனர். முதலமைச்சருக்கு மீண்டும் சிகிகிச்சை அளிக்க இன்று அல்லது நாளை லண்டன் டாக்டர் ரிச்சர்டு வரலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது.