முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழக்கை பயணம்

தமிழக திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் பலமான முத்திரையை பதித்துச் சென்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

தமிழக திரையுலகிலும், அரசியல் அரங்கிலும் பலமான முத்திரையை பதித்துச் சென்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றை இங்கே காணலாம்.

இந்தியாவின் மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்திற்குட்பட்ட பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி தம்பதியரின் மகளாக 24-2-1948 அன்று ஜெயலலிதா பிறந்தார்.

ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதானபோதே அவரது தந்தை ஜெயராம் மறைந்தார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த ஜெயலலிதாவின் தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார்.

தனது தாயாரின் சகோதரியின் பராமரிப்பில் பெங்களூரில் வளர்ந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.

சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக்குலேஷன் (மேல்நிலை) வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பை கைவிட்டு நடிகையானார்.

மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய ஜெயலலிதாவின் தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்னொட்டாக ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார். அதனால் ஜெயலலிதா என்ற பெயரில் திரையுலகில் தடம் பதித்தார்.

முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் ஷங்கர் வி.கிரி இயக்கிய “எபிஸ்ட்டில்” என்ற ஆங்கிலப் படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

1964-ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாத்துறைக்குள் நுழைந்த ஜெயலலிதா, ஓராண்டுக்கு பின்னர் ஸ்ரீதர் இயக்கிய ‘வெண்ணிற ஆடை’ என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு சினிமாக்களிலும் தோற்றமளித்தார்.

தனது திரையுலக வாழ்க்கையில் மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜெயலலிதா, அவற்றுள் 28 படங்களில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார். மேலும், சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ.வி.எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆரின் ஆலோசனையின்படி, பொதுவாழ்வில் தடம்பதிக்க விரும்பிய ஜெயலலிதா 1981-ல் அ.தி.மு.க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். எம்.ஜி.ஆரால் அறிமுகம் செய்யப்பட்ட ‘சத்துணவு திட்டம்’ என்ற அரிய திட்டத்தை நடைமுறைபடுத்தும் உயர்மட்ட ஆலோசனை குழுவில் இடம்பெற்றார்.

அதன் பிறகு 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989-ம் ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவி வி.என்.ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தலைமையின்கீழ் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. அ.தி.மு.க.(ஜெ), அ.தி.மு.க.(ஜா) என்ற இரு அணிகள் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன.

இந்த தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா, 27 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழகத்தின் இரண்டாவது பெண் முதல்வராக முதன்முறையாக பதவி ஏற்றார், அதன்பின்னர் ஐந்துமுறை இந்தப் பதவியை ஏற்றுள்ளார்.

* ஜெயலலிதாவின் தலைமையின்கீழ், 1991-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் அபார வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

* 1998-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.க. அங்கம் வகித்தது. 2001-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது.

* 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

* 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37 தொகுதிகளில் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.

* 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாகவும், 7 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. பின்னர், கடந்த மாதம் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றதால் தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியின் பலம் 137 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது.

* அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிகமுறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.
Ads by ZINC

1991 முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணிய சுவாமி பெற்றார்.

2001-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வரானதும் இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது. இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313-ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

1991-96 ஆண்டுகளுக்கு இடையில் தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று தீர்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் பதவியையும் அவர் இழக்க நேரிட்டது.

இதற்கு முன்னதாக அரசு நிலத்தை முறைகேடாக வாங்கிய மற்றொரு வழக்கில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி ஏற்கெனவே ஒருமுறை பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பாக ஜெயலலிதா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இந்நிலையில், வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா சுமார் இரண்டு கோடி ரூபாய் அபராதமாக செலுத்தியதால், 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதன் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கும் முடிவுக்கு வந்தது.

அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதால் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற ஜெயலலிதா 23-5-2015 அன்று தமிழக முதலமைச்சராக ஐந்தாவது முறை பதவி ஏற்றுக்கொண்டார்.

ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு சட்டசபை பொதுதேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார்.

கடந்த 22-9-2016 அன்று பின்னிரவு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நீண்ட நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்திருந்ததால் ஜெயலலிதா வகித்த துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என்றும் அமைச்சரவையை அவரே வழி நடத்துவார் என்றும் தமிழக (பொறுப்பு) ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ் கடந்த மாதம் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஜெயலலிதாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல்நலன் அபாயகட்டத்தில் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பு தெரிவித்தது.

அதன்பிறகு ஈ.சி.எம்.ஓ. (ECMO) என்றழைக்கப்படும் இதயத்தை செயற்கையாக இயக்கும் கருவி மற்றும் உயிர் காக்கும் பிற மருத்துவக் கருவிகளின் உதவிகொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று பிற்பகல் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் லட்சோப லட்சம் தொண்டர்கள் மற்றும் மக்களின் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் கிட்டும், எப்படியும் மறுபிறவி எடுத்துவருவார் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அந்த பேரதிர்ச்சியான செய்தி நள்ளிரவு 12 மணியளவில் எட்டியது.

ஆம், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவியாக திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் போயஸ் இல்லம் அருகே குவிந்திருந்த தொண்டர்கள் தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கதறித் துடித்தனர்.

தனது ஆட்சிக்காலத்தில் ‘தொட்டில் குழந்தை திட்டம்’, ‘மழைநீர் சேகரிப்பு திட்டம்’, ‘அனைத்து மகளிர் காவல் நிலையம்’, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், கையேடுகள், எழுதுபொருட்கள், சைக்கிள், பேருந்து அனுமதி அட்டை, லேப்டாப்கள் போன்றவை அளிக்கும் திட்டம், உள்ளாட்சி தேர்தல்களில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக இட ஒதுக்கீடு போன்றவை இவரது ஆட்சிக்காலத்தில் சாதனை திட்டங்களாக அக்கட்சி தொண்டர்கள் குறிப்பிடுகின்றனர்.