முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் உணவு உண்கிறார்: பொன்னையன்

உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இன்று  30-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றனர். புறப்படும் முன்பு, இங்குள்ள டாக்டர்கள் குழுவிடம், ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகளை தொடர வேண்டும் என்பது குறித்தும் பட்டியலிட்டு கொடுத்துள்ளனர்.

அதன்படி, அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சையும் அவருக்கு நல்ல பலனளித்து வருகிறது. இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் கூறியதாவது:- “ இறைவன் அருளாலும் மருத்துவர்களின் அற்புதமான சிகிச்சையாலும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனக்கு தேவையான உணவை தாமே அருந்தும் அளவுக்கு ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுத்து வருகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார். ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.