சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடப்பது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும். மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா திருவிழா இன்று தொடங்கியது. கோயிலில் காலை 7 மணியளவில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.  கொடி மரத்தின் அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினார்கள். பல்வேறு பூஜைகளுக்கு பிறகு கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சார்யர் நடராஜ ரத்ன தீட்சிதரால் கொடி ஏற்றப்பட்டது. பின்னா் கொடி மரத்திற்கும், பஞ்ச மூர்த்திகளுக்கும் தீபாராதனை நடந்தது. இதனை கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் பிரகாரம் வலம் வந்து பின்னர் நான்கு வீதிகளிலும் வலம் வந்தனர். 3ம் தேதி சந்திரபிரபை வாகனத்திலும், 4ம் தேதி தங்க சூர்யபிரபை வாகனத்திலும், 5ம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதியுலா வருகின்றன. 6ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சானிலும், 7ம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 8ம் தேதி இரவு தங்க கைலாச வாகனத்திலும், 9ம் தேதி மாலை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் கோலத்திலும் சாமி வீதியுலா நடக்கிறது.

10ம் தேதி முக்கிய விழாவான தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 4.30 மணிக்கு மேல் கோயில் சித்சபையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள்கிறார். பின்னர் தனித்தனி தேர்களில் வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 3மணிக்கு மேல் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகாபிஷேகமும் 10 மணிக்கு மேல் திருவாபரண அலங்காரமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 12ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.